காரிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மூட்டைகளை படத்தில் காணலாம்
நிறுத்தப்பட்டிருந்த காரில் ரூ.3 லட்சம் குட்கா பறிமுதல்
- காரிமங்கலம் அகரம் சாலையில் நிறுத்தப்படிருந்த காரில் ரூ. 3 லட்சம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
- 500 கிலோ சிக்கியது
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வழியாக கர்நாடகா, ஆந்திர உள்ளிட்ட மாநிலங்க ளிலிருந்து சேலம், கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு தடை செய்யபட்ட குட்கா பொருட்களை கடத்தி செல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது. அப்படி கடத்தலில் ஈடுபடும் நபர்களை போலீசார் அவ்வப்போது கண்டறிந்து பிடிக்கும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அகரம் பிரிவு சாலையில் காரிமங்கலம் சப் இன்ஸ்பெக்டர் மதியழகன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாலையோரம் நீண்ட நேரம் சொகுசு கார் நின்று கொண்டிருப்பதாக காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சொகுசு கார் கேட்பாரற்று இருப்பதை கண்டு சந்தேகமடைந்து காரை திறந்து சோதனை மேற்கொண்டனர். அதில் சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான 500 கிலோ ஹான்ஸ் , குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் இருந்ததை கண்டறிந்தனர்.
உடனடியாக சொகுசு காருடன் கடத்தப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து குட்கா பொருட்களை கடத்தி வந்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.