உள்ளூர் செய்திகள்

அன்னூர் அருகே 465 பயனாளிகளுக்கு ரூ.1.51 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள்

Published On 2023-02-23 09:43 GMT   |   Update On 2023-02-23 09:43 GMT
  • கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு 465 பயனாளிகளுக்கு ரூ.1.51 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
  • இம்முகாமில் வழங்கப்பட்டுள்ள மனுக்கள் மீது உரிய காலத்தில் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கோவை,

கோவை மாவட்டம், அன்னூர் வட்டம் காரேகவுண்ட ன்பாளையத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது.

இதில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு 465 பயனாளிகளுக்கு ரூ.1.51 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

கோவை மாவட்டத்தில் மக்கள் தொடர்பு முகாமானது மாதந்தோறும் நடத்தப்பட்டு, மக்களுக்கு அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. அதன்படி, அன்னூர் வட்டம் காரேகவுண்ட ன்பாளையத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறுகின்றது.

முகாமிற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே, துறைவாரியாக சிறப்பு முகாம்கள் நடத்தி இப்பகுதி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைமனுக்களை பெற்று, உரிய மனுக்களுக்கு உடனடியாக பரிசீலனை செய்யப்பட்டு, அதற்கான நலத்திட்ட உதவிகளும் இந்த முகாம்களில் வழங்கப்படுகின்றது. இந்த முகாமிலும் மக்கள் மனுக்களை வழங்கலாம்.ஒரு கிராமத்திற்கு என்னென்ன தேவைகள் இருக்கின்றதோ, அந்த தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்கின்ற வகையில்தான் இந்த முகாம்கள் நடத்தப்படுகின்றன.

மேலும் இம்முகாமில் வழங்கப்பட்டுள்ள மனுக்கள் மீது உரிய காலத்தில் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அனைத்து அரசுத்துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்து விளக்கும் வகையில், அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள அரங்குகளை பொதுமக்கள் பார்வையிட்டு, அரசின் திட்டங்களை அறிந்து கொள்வதுடன், தகுதியான திட்டங்களின் கீழ் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த பகுதியில் உற்பத்தியாகும் காய்கறிகள், அவற்றை இன்னும் சிறப்பாக உற்பத்தி செய்வதற்கான வழிமுறைகள் குறித்து வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலை துறையின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இப்பகுதி மகளிர் சுயஉதவி குழுக்களால் தயாரிக்கப்பட்ட சேலைகள் கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான நிகழ்ச்சியில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது தமிழ்நாட்டிற்கே பெருமை சேர்க்கும் வகையில் சிறப்பு பெற்றுள்ளது. அரசின் சார்பில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம், மகளிர் சுயஉதவி குழுக்கள் உள்ளிட்டவைகள் பொருளாதார வளர்ச்சி பெறும் வகையிலான உதவிகள் அரசின் சார்பில் வழங்கப்படுகின்றன.

இந்த வருடம் உலக சிறுதானிய ஆண்டாக கொண்டாடப்படுகிறது. நம்நாட்டில் சிறுதானியங்கள் பாரம்பரியமிக்கவையாக உள்ளன.

சத்துணவு குறைபாட்டை போக்கு வகையில் சிறுதானியங்கள் சாப்பிடுவதன் மூலம் ஈடுகட்ட முடியும். இவ்வாறு அவர் பேசினார். 

Tags:    

Similar News