உள்ளூர் செய்திகள்

ஆபத்தான முறையில் பள்ளி கட்டிட மாடியில் ஏறி சுத்தம் செய்யும் மாணவர்கள்

அரசு பள்ளியில் ஆபத்தான முறையில் மாடியில் ஏறி சுத்தம் செய்யும் மாணவர்கள்

Published On 2022-06-16 05:17 GMT   |   Update On 2022-06-16 05:17 GMT
  • மாணவர்களை ஆசிரியர்கள் மாடியில் ஏறி மழைத்தண்ணீர் செல்ல முடியாமல் தேங்கி இருக்கும் இலை தழைகளை சுத்தம் செய்யச் சொன்னார்கள்.
  • மாணவர்கள் அரசு பள்ளி கட்டிடத்தின் மாடியில், தாவி விளையாடி சுத்தம் செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செம்பட்டி :

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே பச்சமலையான்கோட்டை யில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் பச்சமலையான்கோட்டை, கேத்தையகவுண்டன்பட்டி உட்பட இந்த பகுதியைச் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், சில பள்ளிகள் சுத்தம் செய்யப்படாமல் செயல்பட தொடங்கியது. இதேபோல், செம்பட்டி அருகே உள்ள பச்சமலையான்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கட்டிட மாடியில் மழை நீர் மற்றும் மர இலைகள் தேங்கி மாடியில் இருந்து தண்ணீர் வெளியேற முடியாமல் தேங்கி கிடந்ததாக கூறப்படுகிறது.

மாணவர்களை அங்குள்ள ஆசிரியர்கள் மாடியில் ஏறச் சொல்லி, மழைத்தண்ணீர் செல்ல முடியாமல் தேங்கி இருக்கும் இலை தழைகளை சுத்தம் செய்யச் சொன்னார்கள்.

ஆசிரியர்கள் சொல்வதை கேட்டு மாணவர்கள், மாடியில் ஏறி இலைகளை கூட்டி சுத்தம் செய்தனர். அப்போது, சில மாணவர்கள் ஆபத்தான முறையில், பள்ளி மாடி கட்டிடத்தில் அங்கும் இங்கும் தாவி விளையாடினர். சில மாணவர்கள் மாடி கைபிடி சுவரில் ஏறி விளையாடினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் செல்வோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆசிரியர்களின் இந்த செயலுக்கு மாணவர்களின் பெற்றோர்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

மாணவர்கள் அரசு பள்ளி கட்டிடத்தின் மாடியில், தாவி விளையாடி சுத்தம் செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News