உள்ளூர் செய்திகள்

துவரங்குறிச்சி அரசு பள்ளியில் மரத்தடியில் படிக்கும் மாணவர்கள்.

மரத்தடியில் படிக்கும் துவரங்குறிச்சி அரசு பள்ளி மாணவர்கள்

Published On 2023-02-07 15:23 IST   |   Update On 2023-02-07 15:23:00 IST
  • நான்கு கட்டிடங்களில் ஒரு கட்டிடத்தை தவிர 3 கட்டிடங்கள் மிகவும் பழுதுபட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளது.
  • அறிவியல் ஆய்வுக்கூடம், விளையாட்டு மைதானம், காம்பவுண்ட் சுவர் என எந்த அடிப்படை வசதிகள் இல்லாமல் பழைய நிலையிலேயே இயங்கி வருகிறது.

மதுக்கூர்:

பட்டுக்கோட்டை அருகே உள்ள துவரங்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள அரசு பள்ளி கடந்த 5 வருடங்களுக்கு முன்பு உயர்நிலைப் பள்ளியாக செயல்பட்டு வந்த நிலையில் தொடர்ந்து 15 ஆண்டுகளாக இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சியை பெற்றனர்.

இந்த நிலையில் இந்தப் பள்ளியை தரம் உயர்த்தி தர வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்ததன் பேரில் மேல்நிலைப் பள்ளியாக தமிழக அரசு தரம் உயர்த்தியது.

இருந்தும் இப்பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டதே தவிர அதற்கான கட்டிடங்கள் மற்றும் அறிவியல் ஆய்வுக்கூடம், விளையாட்டு மைதானம், காம்பவுண்ட் சுவர் என எந்த அடிப்படை வசதிகள் இல்லாமல் பழைய நிலையிலேயே இயங்கி வருகிறது.

மேலும் பள்ளியில் உள்ள நான்கு கட்டிடங்களில் ஒரு கட்டிடத்தை தவிர 3 கட்டிடங்கள் மிகவும் பழுதுபட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளது.

உயர்நிலைப் பள்ளியாக இருந்தபோதே நான்கு கட்டிடங்கள் போதாத சூழலில் தற்போது மேல்நிலைப் பள்ளியாக இயங்கி வரும் நிலையில் வகுப்பறைகள் பற்றாக்குறையால் ஆசிரியர்கள் மாணவர்களை மரத்தடியில் உட்காரவைத்து பாடம் நடத்தும் அவல நிலை உள்ளது.

அத்தோடு கட்டி டங்கள் பழுதடைந்த நிலையில் உள்ளதால் மழைக்காலங்களில் இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் பள்ளி வராண்டாவில் மாணவர்கள் படித்து வருகின்றனர்.

மேல்நிலைப் பள்ளிக்கு அறிவியல் ஆய்வுக்கூடம் அவசியம் என்ற நிலையில் அறிவியல் ஆய்வுக்கூடம் இல்லாததால் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறையும் அபாயம் உள்ளது.

மேலும் பள்ளிக்கான சுற்றுச்சுவர் இல்லாததால் ஆடு, மாடு, நாய் மற்றும் விஷ ஜந்துக்கள் பள்ளி வளாகங்கள் மற்றும் வகுப்பறைக்குள் புகுந்து விடுகின்றன.

இதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது, அத்தோடு சுற்றுச்சுவர் இல்லாததால் இரவு நேரங்களில் அந்நிய நபர்கள் பள்ளி வளாகத்திற்குள் வந்து மது அருந்தி விட்டுச் செல்லும் நிலையும் உள்ளது.

மேலும் ஆசிரியர் பற்றாக்குறை உள்ள நிலையில் அரசு பள்ளி மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கத்துடன் இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சோமசுந்தரம் தனது சொந்த பணத்தில் மூன்று தற்காலிக ஆசிரியர்களை நியமித்து அதற்காக மாதம் தோறும் ரூபாய் 20 ஆயிரத்தை கொடுத்து வருவதாக பள்ளி மாணவர்களின் பெற்றோ ர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே மேல்நிலைப் பள்ளிக்கான ஆய்வுக்கூடம், புதிய கட்டிடம், சுற்றுச்சுவர் என அமைத்து மேலும் கூடுதல் ஆசிரியர்களை நியமித்து இப்பகுதியில் உள்ள 15 கிராமங்களுக்கு மேற்பட்ட ஏழை மாணவ மாணவிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டும் என மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News