உள்ளூர் செய்திகள்

செங்கல்பட்டில் ஓய்வு பெற்ற ஆஸ்பத்திரி ஊழியர் வீட்டில் 60 பவுன் நகை கொள்ளை

Published On 2022-08-01 14:36 IST   |   Update On 2022-08-01 14:36:00 IST
  • தாமோதரனின் வீட்டு பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
  • என்ஜினீயர் சஜேஷ் குமார் என்பவரது வீட்டில் 13 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் கொள்ளை போய் உள்ளது.

செங்கல்பட்டு:

செங்கல்பட்டை அடுத்த அனுமந்த புத்தேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் தாமோதரன். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.

இவரது மனைவி ஆண்டாளுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அவரை சென்னையில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்து இருந்தனர். தாமோதரன் வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் தங்கி கவனித்து வந்தார்.

இந்த நிலையில் இன்று காலை தாமோதரனின் வீட்டு பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தாமோதரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர் விரைந்து வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 60 பவுன் நகை, 10 கிலோ வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

மற்றொரு சம்பவம்...

தாம்பரம் சி.டி.ஓ. காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் என்ஜினீயர் சஜேஷ் குமார் என்பவரது வீட்டில் 13 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் கொள்ளை போய் உள்ளது.

இந்த கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News