உள்ளூர் செய்திகள்

தங்கம் விலை பவுனுக்கு 520 ரூபாய் அதிகரிப்பு- 46 ஆயிரத்தைக் கடந்தது

Published On 2023-10-28 04:41 GMT   |   Update On 2023-10-28 06:44 GMT
  • தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
  • இன்று தங்கம் விலை பவுனுக்கு 520 ரூபாய் அதிகரித்துள்ளது.

சென்னை:

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்வதும், குறைவதுமாக உள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் தங்கத்தின் விலை மாறுபடும்.

இந்நிலையில், தற்போது இஸ்ரேல் படையினருக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினருக்கும் இடையே நடந்து வரும் சண்டை உச்சமடைந்து உள்ளதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை உயர்ந்துவிட்டது. இதன் காரணமாக தங்கத்தின் விலையும் கடந்த சில நாட்களாக ஜெட் வேகத்தில் உயரத் தொடங்கிவிட்டது.

கடந்த 19-ம் தேதி பவுன் ரூ. 44,680-க்கு விற்ற தங்கத்தின் விலை தொடந்து அதிகரித்து இன்று ரூ. 46 ஆயிரத்தை தாண்டி அதிர்ச்சி அளித்துள்ளது.

நேற்று தங்கத்தின் விலை கிராம் ரூ. 5,705- ஆகவும், பவுன் ரூ. 45,640 ஆகவும் இருந்தது. இன்று ஒரே நாளில் கிராம் ரூ.65-ம் பவுன் ரூ. 520-ம் உயர்ந்துள்ளது. இன்று கிராம் ரூ. 5,770-க்கும், பவுன் ரூ. 46,160-க்கும் விற்பனை ஆகிறது. இஸ்ரேல் போர் காரணமாக தங்கத்தின் விலை மேலும் உயர வாய்ப்பு இருப்பதாக நகைக்கடை அதிபர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவை பொறுத்தவரை காலம் காலமாக தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநில பெண்களிடம் தங்கத்தின் மீதான மோகம் அதிகமாக இருந்து வருகிறது. தங்க நகையை அணிவதை நம் நாட்டு பெண்கள் ஒரு கவுரவமாக நினைத்து வருகின்றனர்.

ஆனால் தற்போது தங்கம் விலை வேகமாக உயர்ந்து வருவது பெண்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏழைகளுக்கு இது எட்டாக்கனியாக மாறி உள்ளது.

தற்போது முகூர்த்த மாதம் என்பதால் ஏராளமான திருமணங்கள் நடந்து வருகிறது. இதனால் நகை வாங்க இருந்தவர்கள் விலை உயர்வை நினைத்து கவலை அடைந்து இருக்கிறார்கள்.

வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. கிராம் ரூ. 77.50க்கும், கிலோ ரூ. 77,500-க்கும் விற்பனை ஆகிறது.

Tags:    

Similar News