காட்டாங்கொளத்தூர் அருகே கஞ்சா விற்றதில் மோதல்- 2 மாணவர்கள் கைது
- கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்வதில் யார் பெரியவர் என்ற காரணத்திற்காக இச்சம்பவம் நடைபெற்றது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
- வழக்கை விசாரணை செய்த நீதிபதி குற்றச்செயலில் ஈடுபட்ட 2 மாணவர்களையும் 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
வடலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் அடுத்த பொத்தேரி பகுதியில் இயங்கி வரும் தனியார் கல்லூரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் அதே கல்லூரியில் படிக்கும் வட மாநிலங்களை சார்ந்த 80-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து கற்களை கொண்டு தாக்கி மோதி கொண்டனர்.
இதில் அவர்களுக்கு ரத்த காயம் ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளிவந்தது. இந்த நிலையில் கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்வதில் யார் பெரியவர் என்ற காரணத்திற்காக இச்சம்பவம் நடைபெற்றது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து மோதலில் ஈடுபட்ட சில மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் தங்கி வந்த வீடுகளுக்கு சென்று விசாரணை நடத்தியதில் அவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் போதை பொருட்கள் அதை உபயோகிக்க உதவும் கருவிகளை கூடுவாஞ்சேரி போலீசார் கைப்பற்றினர்.
மோதலில் ஈடுபட்ட 2 மாணவர்களை கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு குற்றவியல் நடுவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
வழக்கை விசாரணை செய்த நீதிபதி குற்றச்செயலில் ஈடுபட்ட 2 மாணவர்களையும் 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். தொடர்ந்து மாணவர்கள் இருவரும் செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.