திருவள்ளூர் அருகே செல்போன் கடை ஊழியர்களை கடத்தி ரூ.20 ஆயிரம் கேட்டு மிரட்டல்- 6 பேர் கும்பல் கைது
- திருவள்ளூரை அடுத்த மணவாளநகரில் செல்போன் கடை நடத்தி வருபவர் டில்லி கணேஷ்.
- கடை உரிமையாளர் டில்லிகணேஷ், ஊழியர்கள் கடத்தப்பட்டது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தா
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த மணவாளநகரில் செல்போன் கடை நடத்தி வருபவர் டில்லி கணேஷ். இவரது கடையில் முகம்மது இப்ராஹிம், சாந்தகுமார் ஆகிய 2 பேரும் ஊழியர்களாக வேலை பார்த்து வருகின்றனர். இரவு கடையை மூடிவிட்டு சாவியை உரிமையாளரிடம் கொடுப்பதற்காக இருவரும் அப்பகுதி வழியாக நடந்து சென்றனர்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 6 பேர் கும்பல் திடீரென சாந்த குமார் மற்றும் முகம்மது இப்ராஹிம் ஆகிய இருவரையும் வழிமறித்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் வலுக்கட்டாயமாக மோட்டார் சைக்கிளில் ஏற்றி கடத்தி சென்று திருவள்ளூர் என்.ஜி.ஓ. காலனியில் உள்ள பூங்காவில் அமரவைத்தனர். மேலும் செல்போன் கடை உரிமையாளர் டில்லி கணேசிடம் செல்போனில் பேசி ஊழியர்களை விடுவிக்க ரூ.20 ஆயிரம் பணம் தரவேண்டும் என்று மிரட்டல் விடுத்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கடை உரிமையாளர் டில்லிகணேஷ், ஊழியர்கள் கடத்தப்பட்டது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், போலீஸ்காரர்கள் சிலம்பரசன், இளையவேல், மூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கடத்தல் கும்பலை சேர்ந்த 6 பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.மேலும் கடை ஊழியர்கள் முகம்மது இப்ராகிம், சாந்த குமார் ஆகிய 2 பேரையும் பத்திரமாக மீட்டனர்.
விசாரணையில் கடத்தலில் ஈடுபட்டது பெரிய குப்பம் மேட்டுத் தெருவைச் சேர்ந்த ஆகாஷ்(23), அன்சார் ஷெரிப் (23), உதயா(22), பூங்கா நகர் பகுதியைச் சேர்ந்த பிராங்க்ளின் (19), பெரியகுப்பம் பகுதியைச் சேர்ந்த மற்றொரு ஆகாஷ் (19), மோகன் (26) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதில் ஆகாஷ் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட 6 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.