கோத்தகிரி-அரவேணு பகுதிகளில் இருந்துபழனிக்கு பக்தர்கள் பாதயாத்திரை
- கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
- மாரியம்மன் கோவிலில் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது.
அரவேணு,
கோத்தகிரி மற்றும் அரவேணு சுற்றுவட்டார பகுதிகளில்
இருந்து பழனிமலை முருகன் கோவிலுக்கு 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதயாத்திரையாக புறப்பட்டுச் சென்றனர். ஒவ்வொரு ஆண்டும் பழனி மலை முருகன் கோவிலில் ஜனவரி மாதம் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுகிறது. இதனையொட்டி கோத்தகிரி பகுதியில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிமலை முருகன் கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை வழிபட்டு வருவது வழக்கம். இதனை முன்னிட்டு அரவேணு கடை வீதி பகுதியில் உள்ள பழனி முருகன் பாதயாத்திரை குழு சார்பில், அதன் குருசாமி துரை தலைமையில் தொடர்ந்து 29-வது ஆண்டாக அரவேணு, கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகள், பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதயாத்திரையாக காவடிகள் ஏந்தி பழனி மலைக்கு புறப்பட்டு சென்றனர். முன்னதாக அரவேணு சக்த்தா மாரியம்மன் கோவில் மற்றும் விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மாரியம்மன் கோவிலில் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது.