சாப்ட்வேர் என்ஜினியரிடம் ரூ.38 லட்சம் மோசடி
- கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் அவர் அளித்த புகார்படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இது போன்ற மோசடிகளில் படித்த இளைஞர்களே அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டைட்டான் டவுன்சிப் துளிர் நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ண சர்மா(வயது 45). இவர் ஓசூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் சாப்ட்வேர் இன்ஜினியனராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த மாதம் 1-ந் தேதி ராமகிருஷ்ண சர்மாவை இன்ஸ்டாகிராம் வழியாக தொடர்பு கொண்ட நபர் பகுதி நேர வேலையாக 'டாஸ்க் கம்ப்ளீட்' என்ற செயலி மூலம் குறைந்த அளவில் முதலீடு செய்து, அதிக லாபம் சம்பாதிக்கலாம். மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள சில இணையதள லிங்குகளையும் அனுப்பியுள்ளார்.
இதை நம்பிய ராமகிருஷ்ண சர்மா அந்த டாஸ்க் கம்ப்ளீட்டில், தன் விவரங்களை குறிப்பிட்டு, ரூ.100 முதலீடு செய்துள்ளார். அடுத்த, சில மணி நேரங்களில் இவர் பெயரில்
உருவாக்கப்பட்ட கணக்குடன், ரூ.1000 ஆக இருந்துள்ளது. இதையடுத்து அவர்கள் அந்த செயலி மூலம் எவ்வளவு பணம் போடுகிறீர்கள் என இணையதள பக்கத்துடன் அனுப்பி உள்ளனர். அதில் குறிப்பிட்ட தொகையை கிளிக் செய்து ஆன்லைனில் அனுப்பியவுடன், ராமகிருஷ்ண ஷர்மா கணக்கில் சேர்க்கப்பட்டு, அதற்கான கூடுதல் தொகை இருப்புடன் காட்டியுள்ளது. மேலும் நிமிடத்திற்கு நிமிடம் இருப்பு தொகையும் அதிகரித்துள்ளது. இதையடுத்து தன்னிடம் இருந்த தொகைகளை 'டாஸ்க் கம்ப்ளீட்' மூலம் ராமகிருஷ்ண சர்மா அனுப்பியவாறு இருந்துள்ளார்.
பிப்ரவரி மாதம் துவக்கம் முதல், தொடர்ந்து ஒரு வாரத்தில் தன்னிடம் இருந்த மொத்த பணம் மற்றும் நண்பர்களிடம் கடன் பெற்று ரூ.37 லட்சத்து 95 ஆயிரத்து 415 ரூபாயை அனுப்பியுள்ளார். அதன் பின்னர் அவர்கள் அனுப்பிய இணைய தளம் பக்கம் முடங்கியது. இவரிடம் டெலிகிராம், வாட்ஸ் அப்பில் பேசியவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. ராமகிருஷ்ண சர்மா பெயரில் உருவாக்கப்பட்ட 'டாஸ்க் கம்ப்ளீட்' கணக்கும் முடங்கியது. இதையடுத்து நேற்று கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் அவர் அளித்த புகார்படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், இது போன்ற மோசடிகளில் படித்த இளைஞர்களே அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். அதற்கு அவர்களின் பேராசையே காரணமாக அமைகிறது. எந்த முதலீடும் மிக குறைந்த நாட்களில் இரட்டிப்பு மடங்காக அதிகரிக்க வாய்ப்பில்லை என்பதை உணர வேண்டும். இது போன்ற தகவல்கள் வந்தால் முதலில் சைபர் க்ரைம் போலீசுக்கு தெரிவியுங்கள். போலீசார் அந்த எண்ணுடன் வாடிக்கையாளர் போல் தொடர்பு கொண்டு அவர்களை பிடிப்பதற்காவது பயன்படும். பணம் இரட்டிப்பாக்கலாம் என ஆசைகாட்டுபவர்களை நம்பி, யாரும் பணத்தை இழக்க கூடாது என எச்சரிக்கை விடுத்தனர்.