உள்ளூர் செய்திகள் (District)

திம்பம் மலைப்பாதையில் குட்டிகளுடன் உலா வரும் யானைகள் கூட்டம்

Published On 2024-09-17 09:13 GMT   |   Update On 2024-09-17 09:13 GMT
  • ஆசனூர் வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன.
  • மலைப்பாதையில் நின்ற யானை கூட்டத்தால் காரில் சென்ற வாகன ஓட்டிகள் பீதியடைந்தனர்.

தாளவாடி:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

இதில் ஆசனூர் வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. யானைகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருகின்றன. மேலும் சில யானைகள் கூட்டம் வனப்பகுதி விட்டு வெளியேறி சாலையோரம் உலா வருகிறது. சில சமயம் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தியும் வருகின்றன.

தற்போது வனப்பகுதியில் வரட்சியான சூழ்நிலை நிலவி வருவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் கூட்டம் வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையோரம் வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி உணவு உள்ளதா? என்று பார்ப்பது தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை திம்பம் மலைப்பாதை 19-வது கொண்டை ஊசி வளைவில் யானைகள் குட்டியுடன் உலா வந்தது.

அவ்வழியாக சென்ற வாகனத்தை வழிமறைத்து உணவு ஏதும் உள்ளதா? என தேடியது. இதனல் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மலைப்பாதையில் நின்ற யானை கூட்டத்தால் காரில் சென்ற வாகன ஓட்டிகள் பீதியடைந்தனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது,

தற்போது யானைகள் கூட்டம் உணவு, தண்ணீரை தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையோரம் வருவது தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக ஆசனூர் வனச்சரத்துக்குட்பட்ட திம்பம் 27 கொண்டை ஊசி வளைவுகளில் யானைகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளன.

எனவே இந்த பகுதியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும். எக்காரணம் கொண்டும் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை வனப்பகுதியில் நிறுத்தக்கூடாது. அதேப்போல் யானை கூட்டத்தை கண்டால் அதனை செல்போன்களில் படம் எடுப்பதையும் நிறுத்த வேண்டும். வாகன ஓட்டிகள் பாதுகாப்பாகவும் கவனத்துடனும் செல்ல வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News