உள்ளூர் செய்திகள்

கோவில்பட்டியில் விமான பயிற்சி மையம் திட்டத்திற்கு ம.தி.மு.க. வரவேற்பு-விரைந்து செயல்படுத்த கோரிக்கை

Published On 2022-08-10 08:52 GMT   |   Update On 2022-08-10 08:52 GMT
  • கோவில் பட்டியில் விமான பயிற்சி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
  • தமிழ்நாட்டில் மொத்தம் 17 விமான ஓடுதளங்கள் உள்ளன. இதில் கயத்தாறு, உளுந்தூர்பேட்டை, சோழவரம், கானாடுகாத்தான், நெய்வேலி, கோவில்பட்டி ஆகியவை பயன்படுத்தப்படாத விமான ஓடுதளங்களாகும்.

கோவில்பட்டி:

கோவில் பட்டியில் விமான பயிற்சி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்து ள்ளார். இதற்கு ம.தி.மு.க. தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ரமேஷ், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் விநாயகா ரமேஷ் ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

விமான ஓடுதளம்

இது தொடர்பாக 2 பேரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் மொத்தம் 17 விமான ஓடுதளங்கள் உள்ளன. இதில் கயத்தாறு, உளுந்தூர்பேட்டை, சோழவரம், கானாடுகாத்தான், நெய்வேலி, கோவில்பட்டி ஆகியவை பயன்படுத்தப்படாத விமான ஓடுதளங்களாகும். மீதமுள்ளவை ஏஏஐ அல்லது இந்திய ஆயுதப் படைகளால் பயன்படுத்தப்படுகின்றன.

கயத்தாறு, உளுந்தூர்பேட்டை, சோழவரம் ஆகியவை இந்திய விமானப் படை கட்டுப்பாட்டில் உள்ளன. நெய்வேலி விமான ஓடுதளம் என்எல்சியிடம் உள்ளது.

திட்டத்திற்கு வரவேற்பு

இந்நிலையில் கோவில்பட்டி விமான ஓடுதளத்தை முக்கிய திட்டமாக கையில் எடுக்க அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.அதனை விமானப் பயிற்சி நிறுவனமாக நிறுவி பயன்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

அதற்கான பணிகள் உடனடியாக தொடங்கப்பட வேண்டும். கோவில்பட்டி அருேக உள்ள மொட்டை மலையில் அமைந்துள்ள விமான ஓடுதளம் பயன்பாடின்றி உள்ளதால் இதை எப்படி விமானப் பயிற்சி நிறுவனமாக மாற்றுவது என்பதை டிட்கோ மூலம் அதற்கான திட்டத்தை வகுக்கும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். அது வரவேற்க கூடியது.

வேலை வாய்ப்பு பெருகும்

இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு அமைந்தால் தூத்துக்குடி மாவட்டம் மட்டுமின்றி தென் மாவட்டங்களில் உள்ள இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறுவார்கள்.

கோவில்பட்டி பகுதியில் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறும் வகையில் திட்டங்கள் செயல்படுத்த வேண்டும் என்ற ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ ஆகியோரின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தமிழக அரசு மேற்கொண்டு உள்ள நடவடிக்கையை ம.தி.மு.க. முழு மனதுடன் வரவேற்கிறது.

இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

Tags:    

Similar News