உள்ளூர் செய்திகள்

மீன்பிடி தடைக்காலம் எதிரொலி- கடலூரில் ஏரி, குளம் மீன்கள் வரத்து அதிகரிப்பு

Published On 2023-04-16 09:31 GMT   |   Update On 2023-04-16 09:31 GMT
  • ஆறு, ஏரி மற்றும் குளம் மீன்களின் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
  • மட்டன் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் இந்த மீன்களை வாங்கி செல்வதாக மீன் வியாபாரிகள் தெரிவித்தனர்.

கடலூர்:

கடலில் மீன்களின் இனப்பெருக்கத்துக்காக ஆண்டுதோறும் மீன் பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படும். அதன்படி நேற்று முதல் வருகிற ஜூன் மாதம் 14-ந்தேதி வரை 61 நாட்கள் மீன் பிடி தடைக்காலமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதன் எதிரொலியாக கடலூர் மஞ்சக்குப்பம், திருப்பாதிரிப்புலியூர், முதுநகர் மற்றும் துறைமுகம் பகுதிகளில் உள்ள மீன் மார்க்கெட்டுகளுக்கு வரும் கடல் மீன்களின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது.

இதன் காரணமாக கடல் மீன்களின் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. இதன் காரணமாக ஆறு, ஏரி மற்றும் குளம் மீன்களின் வரத்து அதிகரித்து காணப்பட்டது.

இந்நிலையில் கடலூர் செம்மண்டலம், சாவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலை ஓரத்தில் கெண்டை மற்றும் வவ்வால் மீன்கள் விற்பனை செய்யப்பட்டன. அப்போது ஏராளமான பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மீன்களை போட்டி போட்டுக் கொண்டு வாங்கி சென்றதை காண முடிந்தது.

மேலும் கடல் மீன்களின் விலை உயர்ந்த காரணத்தினால் இந்த மீன்களை பொதுமக்கள் வாங்கி சென்றதோடு, தற்போது வெயில் காலம் என்பதால் சிக்கன் அதிகளவில் வாங்க விருப்பம் இல்லாத நிலையிலும், மட்டன் விலை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் இந்த மீன்களை வாங்கி செல்வதாக மீன் வியாபாரிகள் தெரிவித்தனர். இதன் காரணமாக காலையிலிருந்து மீன்கள் வாங்குவதற்கு மக்கள் குவிந்திருந்ததை காணமுடிந்தது.

Tags:    

Similar News