உள்ளூர் செய்திகள்

வாரச்சந்தையில் தீ விபத்து- ரூ.9 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம்

Published On 2025-09-12 11:46 IST   |   Update On 2025-09-12 11:47:00 IST
  • டீக்கடைகள், ஓட்டல் என அனைத்து கடைகளும் இங்கு செயல்பட்டு வருகிறது.
  • பழக்கடை மற்றும் அதனை அடுத்துள்ள துணிக்கடை ஆகிய 2 கடைகளும் தீப்பிடித்து மளமளவென கொளுந்து விட்டு எரிந்துள்ளது.

திசையன்விளை:

நெல்லை மாவட்டம் திசையன்விளை சிறப்பு நிலை பேரூராட்சிக்கு சொந்தமான சுமார் 150 கடைகள் கொண்ட மார்க்கெட் இயங்கி வருகிறது.

திசையன்விளையின் மையப் பகுதியில் அமைந்துள்ள இந்த மார்க்கெட்டில் வாரச்சந்தையும் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை செயல்பட்டு வருகிறது.

இந்த சந்தையில் காய்கறிகள், மளிகை பொருட்கள், பழங்கள், கருவாடு, மீன், சிக்கன், மட்டன், தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுவதோடு குளிர்பான கடைகள், டீக்கடைகள், ஓட்டல் என அனைத்து கடைகளும் இங்கு செயல்பட்டு வருகிறது.

இந்த கடைகள் வியாபாரிகளுக்கு மிகக்குறைந்த கட்டணத்தில் தரை வாடகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இங்கு கடைகள் வைத்திருப்போர் தற்காலிகமாக தென்னந்தட்டி மற்றும் தகர சீட்டு கொண்டு தற்காலிக கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று வழக்கம்போல் வாரச்சந்தை நடைபெற இருந்த நிலையில் அதிகாலை பேரூராட்சி சந்தையின் வெளிப்புறம் அமைந்துள்ள டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தவர்கள், திடீரென சந்தையின் உள்புறம் இருந்து புகை மண்டலமாக வருவதை கண்டு உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

அப்போது சந்தை வடக்கு வாசல் நுழைவுப் பகுதியில் அமைந்துள்ள பழக்கடை மற்றும் அதனை அடுத்துள்ள துணிக்கடை ஆகிய 2 கடைகளும் தீப்பிடித்து மளமளவென கொளுந்து விட்டு எரிந்துள்ளது.

இதனை கண்ட அந்த பகுதியில் நின்றவர்கள் உடனடியாக அங்கு இருந்த தண்ணீரை ஊற்றி அணைக்க முயற்சி செய்துள்ளனர். தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாததால் உடனடியாக திசையன்விளை தீயணைப்பு மீட்பு படையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அங்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். மேலும் சந்தை முழுவதும் தீ பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் தீ விபத்தில் திசையன்விளையை சேர்ந்த ராபர்ட் பாக்கியசீலன்(வயது 30) என்பவரின் ரூ.4 லட்சம் மதிப்புள்ள பழக்கடை, வாகனேரியை சேர்ந்த அன்னக்கிளி(48) என்பவரின் ரூ.5 லட்சம் மதிப்புள்ள துணிக்கடை மற்றும் தராசு, மர அலமாரி, தளவாடப் பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளது.

தீ விபத்து குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பேரூராட்சிக்கு சொந்தமான திசையன்விளை தினசரி மற்றும் வாரச்சந்தையில் இது போன்று தீ விபத்து அடிக்கடி நடைபெறுவது தொடர் கதையாகி வருகிறது. பேரூராட்சி சந்தையினை நவீனப்படுத்திட ஏற்கனவே அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் அதன் பின்னர் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டு விட்டது. எனவே ஸ்மார்ட் மார்க்கெட்டாக மாற்றினால் மட்டுமே இதுபோன்ற தீ விபத்தை தடுக்க முடியும். இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News