பெண் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரெயில் மோதி பலி
- பணி நிமித்தமாக சென்ற பெண் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரெயில் மோதி இறந்த சம்பவம் பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜோலார்பேட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம், தேவ மூர்த்தி கிராமத்தை சேர்ந்தவர் நித்தியானந்தம். இவரது மனைவி மேரி ஸ்டெல்லா (வயது 50). இவர் கிருஷ்ணகிரி அடுத்த கந்திக்குப்பம் பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலை வழக்கு சம்பந்தமாக சென்னை ஐகோர்ட்டு செல்வதற்காக கிருஷ்ணகிரியில் இருந்து பஸ்சில் வாணியம்பாடி ரெயில் நிலையத்திற்கு வந்தார்.
நேரம் ஆனதால் சென்னை செல்லும் ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலை பிடிப்பதற்காக தண்டவாளத்தை கடந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஆலப்புழையில் இருந்து தன்பாத்து வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் மேரி ஸ்டெல்லா மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து ரெயிலில் அடிபட்டு இறந்த மேரி ஸ்டெல்லா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணி நிமித்தமாக சென்ற பெண் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரெயில் மோதி இறந்த சம்பவம் பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.