காட்டு பன்றியை வேட்டையாடிய தந்தை- மகன் சிறையில் அடைப்பு
- வழக்கமாக வரும் காட்டுப்பன்றி ஒன்று நேற்று இரவு எதிர்பாராத விதமாக கவுரனின் விவசாய நிலத்தில் மின்சாரம் தாக்கி உயிர் இழந்தது.
- தந்தை மற்றும் மகன் இருவரும் இணைந்து இறந்த காட்டு பன்றியை சமைக்க முடிவு செய்தனர்.
பாலக்கோடு,
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே தீத்தாரஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கவுரன் (வயது58) . விவசாயி. இவரது மகன் ராம்குமார் (32).
இந்த நிலையில் இவர்கள் இருவரும் தங்களது விவசாய நிலத்தில் விளை பயிர்களை காட்டு விலங்குகளிலிருந்து காப்பாற்ற மின்சாரத்தை பயன்படுத்தி வயல்வெளி முழுவதும் மின்கம்பி மூலம் மின்சாரம் பாய்ச்சி வந்தனர்.
வழக்கமாக வரும் காட்டுப்பன்றி ஒன்று நேற்று இரவு எதிர்பாராத விதமாக கவுரனின் விவசாய நிலத்தில் மின்சாரம் தாக்கி உயிர் இழந்தது.
இதையடுத்து தந்தை மற்றும் மகன் இருவரும் இணைந்து இறந்த காட்டு பன்றியை சமைக்க முடிவு செய்த நிலையில் பாலக்கோடு வனத்துறைக்கு பொதுமக்கள் ரகசிய தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாலக்கோடு வனத்துறையினர், இருவரையும் பிடித்து விசாரித்ததில் குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.
இது குறித்து போலீசார் தந்தை மகன் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.