உள்ளூர் செய்திகள்

வைகை அணை (கோப்பு படம் )

70 அடியில் நீடிக்கும் நீர்மட்டம் வைகை அணையில் இருந்து 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு

Published On 2022-09-12 10:46 IST   |   Update On 2022-09-12 10:46:00 IST
  • வைகை அணை மூலம் 33 கண்மாய்களில் தண்ணீர் தேக்கப்படுகிறது. இதன்மூலம் 58 கிராமகால்வாய் திட்டம் கொண்டுவரப்பட்டது.
  • 2000 ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறும் வகையில் 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க பொதுப்பணித் துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

கூடலூர்:

பருவமழை கைகொடுத்த நிலையில் வைகை அணையின் நீர்மட்டம் முழுகொள்ளளவை எட்டியது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் கடந்த அக்டோபர் 21-ந்தேதி முதல் 70 அடி தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வழக்கமாக 69 அடி நீர்மட்டம் உயரும்போது அணையின் பாதுகாப்பு கருதி வைகையாற்றில் உபரிநீர் திறக்கப்படும்.

வைகை அணை மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை, மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி பகுதியில் உள்ள 33 கண்மாய்களில் தண்ணீர் தேக்கப்படுகிறது. இதன்மூலம் 58 கிராமகால்வாய் திட்டம் கொண்டுவரப்பட்டது.

கடந்த 1999-ம் ஆண்டு ரூ.33.81 கோடி மதிப்பில் தொடங்கிய இந்த திட்டம் கடந்த 2018-ம் ஆண்டு ரூ.86.53 கோடி செலவில் முடிவடைந்தது. இதனைதொடர்ந்து கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. வைகை அணையில் இருந்து 27 கி.மீ தூரம் பிரதான கால்வாய் வழியாக உசிலம்பட்டி அருகே உத்தமப்பநாயக்கனூர் வரையும், அங்கிருந்து 2-ஆக பிரிந்து 11.9 கி.மீ தூரம் இடபுறமும், 10.2 கி.மீ தூரம் வலதுபுறமும், 58 கிராம கால்வாய் செல்கிறது.

வைகை அணையின் நீர்மட்டம் 67 அடியாக உயரும்போது கால்வாய்க்கு தண்ணீர் திறக்கும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டது. கடந்த 21 நாட்களாக அணையின் நீர்மட்டம் 70 அடிவரை நிலை நிறுத்தப்பட்டுள்ளது. எனவே உசிலம்பட்டி பகுதியில் உள்ள 2000 ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறும் வகையில் 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

வைகை அணையின் நீர்மட்டம் 70.54 அடியாக உள்ளது. 2031 கனஅடிநீர் வருகிறது. மதுரைமாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 2069 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. முல்ைலபெரியாறு அணையின் நீர்மட்டம் 138.15 அடியாக உள்ளது. 1988 கனஅடிநீர் வருகிறது. 1867 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 184 கனஅடிநீர் உபரியாக திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.34 அடியாக உள்ளது. 15 கனஅடிநீர் வருகிறது. 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

பெரியாறு 5, தேக்கடி 2.2 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News