உள்ளூர் செய்திகள்

விவசாயிகள், பால்உற்பத்தியாளர்கள் அரசின் திட்டங்களை பெற்று பயன் அடைய வேண்டும்-கலெக்டர் சரயு அறிவுரை

Published On 2023-07-20 10:10 GMT   |   Update On 2023-07-20 10:10 GMT
  • பாலுக்கான தொகை வாரம் ஒருமுறை அல்லது 10 நாட்களுக்கு ஒருமுறை தாமதமின்றி வழங்கப்படுகிறது.
  • அனைத்து விவசாயிகள், பால் உற்பத்தியாளர்களும், அரசின் திட்டங்களை பெற்று பயனடைய வேண்டும்.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டம் பாலிநாயனப்பள்ளி மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் கிளை மிட்டப்பள்ளியில், கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம், பால்வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு கால்நடை மருத்துவ முகாம் மற்றும் பால் உற்பத்தி கருத்தரங்கு நேற்று நடந்தது.

இதற்கு கலெக்டர் கே.எம்.சரயு தலைமை தாங்கினார். டி.மதியழகன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் கால்நடைகளுக்கு தடுப்பூசி மற்றும் பூச்சி மருந்துகள் வழங்கும் பணியை தொடங்கி வைத்து கலெக்டர் பேசியதாவது:-

உற்பத்தியாளர்கள் வழங்கும் பாலுக்கு பாலின் தரத்தின் அடிப்படையில் வெளிப்படை தன்மையுடன் அரசு நிர்ணயித்த விலை வழங்கப்படுகிறது. தனியார் நிறுவனம் போல் விலை கூட்டவோ, குறைப்பதோ இல்லை. பாலுக்கான தொகை வாரம் ஒருமுறை அல்லது 10 நாட்களுக்கு ஒருமுறை தாமதமின்றி வழங்கப்படுகிறது.

கலப்பு தீவனம், தனியார் நிறுவனங்களை விட குறைந்த விலையில் கிலோ ரூ.21-க்கு விநியோகம் செய்யப்படுகிறது. மாவட்ட மண் பரிசோதனைப்படி சிறப்பு தாது உப்பு கலவை குறைந்த விலையில் கிலோ ஒன்றுக்கு ரூ.50 என வழங்கப்பட்டு கால்நடையின் உடல் ஆரோக்கியம் மற்றும் பால் உற்பத்தி அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள் ளப்படுகிறது.

மேலும், பேரறிஞர் அண்ணா நலநிதி திட்டத்தின் மூலம் வருடம் முழுவதும் தொடர்ந்து பால் வழங்கும் உற்பத்தியாளர்களுக்கு காப்பீடு செய்யப்பட்டு, அதன் மூலம் விபத்தில் ஒரு உறுப்பு இழப்புக்கு ரூ.75,000-ம், விபத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பு இழப்புக்கு ரூ.1,75,000-ம், விபத்தில் உயிர்நீத்த உற்பத்தியாளர் குடும்பத்திற்கு ரூ.2,50,000-ம்,

இறந்தவரின் இறுதிசடங்கிற்கு ரூ.5,000-ம், குழந்தையின் திருமண செலவுக்கு ஒரு நபருக்கு ரூ.30,000-ம் மற்றும் அவரின் 2 குழந்தைகள் கல்வி உதவித்தொகை ரூ.50 ஆயிரம் என காப்பீடு தொகை வழங்கப்படுகிறது. எனவே, அனைத்து விவசாயிகள், பால் உற்பத்தியாளர்களும், அரசின் திட்டங்களை பெற்று பயனடைய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் ஆவின் பொது மேலாளர் சுந்தரவடிவேலு, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் ராஜேந்திரன், கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் அருள்ராஜ், பால்வள துணைப்பதிவாளர் கோபி, ஆவின் உதவி பொது மேலாளர் நாகராஜன், பாலிநாயனப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் மகேந்திரன், பாலிநாயனப்பள்ளி, பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் சரஸ்வதி சீனிவாசன், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் வி.ஜி.ராஜேந்திரன், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் கால்நடைத்துறை மருத்துவர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News