உள்ளூர் செய்திகள்

உழவர் தின பேரணி பொதுக்கூட்டம்

Published On 2023-07-06 15:40 IST   |   Update On 2023-07-06 15:40:00 IST
  • வேளாண் சார்ந்த தொழிலுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்.
  • 100 நாள் வேலை திட்டத்தை விவசாயத்திற்கு மட்டும் முறையாக பயன்படுத்த வேண்டும்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியில், தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில், உழவர் தின பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது.

தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ராமகவுண்டர் தலைமையில், உழவர் தின பேரணி, எல்.ஐ.சி.. அலுவலகம் அருகில் இருந்து புறப்பட்டு சேலம் சாலை வழியாக 5 ரோடு ரவுண்டானா அருகில் நிறைவடைந்தது. அங்கு பொதுக்கூட்டம் நடந்தது.

இதற்கு மாநில தலைவர் ராமகவுண்டர் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார். மாவட்டத் தலைவர் வண்ணப்பா, மாவட்ட துணைத் தலைவர் தோப்பையகவுண்டர், மாவட்ட ஆலோசகர் நசீர்அகமத், மாவட்ட துணை செயலாளர் அனுமந்தராஜ், மாவட்ட பொருளாளர் சுப்பிரமணிரெட்டி மகளிர் அணி தலைவி பெருமா, துணைத் தலைவர் வேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்திற்கு, தென்னிந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் நரசிம்மநாயுடு, கர்நாடகா விவசாய சங்கத் தலைவர் குருபூர்சாந்தகுமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

கூட்டத்தில், தெலுங்கானா அரசு போல் ஏக்கருக்கு 10 ஆயிரம் ரூபாய் வீதம் ஒவ்வொரு போகத்திற்கும் உற்பத்தி மானியம் பணமாக வழங்கி, காலேஸ்வரம் நீர்ஏற்று திட்டம் போல், ஒகேனக்கல் தண்ணீரை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கும் பெரிய மின்மோட்டார் மூலம் நீர்ஏற்றி வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு மத்திய அரசு தேசிய வங்கி கடன்களையும், தமிழக அரசு கூட்டுறவு கடன்களையும், முழுவதும் தள்ளுபடி செய்ய வேண்டும். வேளாண் சார்ந்த கட்டண மின்சாரத்தையும், வேளாண் சார்ந்த தொழிலுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை விவசாயத்திற்கு மட்டும் முறையாக பயன்படுத்த வேண்டும். பயிர்சேதம் செய்யும் வனவிலங்குகளை சுட விவசாயிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதை தெளிவுப்படுத்த வேண்டும்.

வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்திற்கு ஏக்கருக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு 15 நாட்களுக்குள் வழங்க வேண்டும். வனவிலங்குகளால் ஏற்பட்ட உயிர்சேதத்திற்கு 20 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். மான், மயில், குரங்குகள் செய்யும் பயிர்சேதங்களுக்கும், இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News