உள்ளூர் செய்திகள்

ஆடுகள் கிடை அமைக்கும் பணியில் தொழிலாளி.

இயற்கை உரமாக கால்நடை கழிவுகளை பயன்படுத்த விவசாயிகள் ஆர்வம்

Published On 2022-10-18 09:37 GMT   |   Update On 2022-10-18 09:37 GMT
  • ரசாயன உரங்கள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு காரணமாக சில விவசாயிகள் இயற்கை உரத்திற்கு மாறி வருகின்றனர்.
  • ஆடுகளின் கழிவுகளை இயற்கை உரமாக பயன்படுத்தி வருகின்றனர்.

மெலட்டூர்:

தஞ்சை மாவட்டம் பாபநாசம், திருக்கருக்காவூர் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயத்திற்கு கால்நடைகளின் கழிவுகளை இயற்கை உரமாக பயன்படுத்த சமீபகாலமாக விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

முந்தைய காலங்களில் கால்நடை கழிவுகளை இயற்கை உரமாக வயல்களுக்கு இட்டு அதிகளவில் விவசாயம் செய்து வந்தனர். அதற்காகவே விவசாயிகள் அதிகளவில் வீடுகளில் கால்நடைகளை வளர்த்து வந்தனர். சமீபகாலமாக கிராமங்களில் கால்நடைகள் வளர்ப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டதால் கால்நடை கழிவுகள் அதிகளவில் கிடைப்பதில்லை.

அதனால் இயற்கை உரத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டதால் ரசாயன உரங்களின் பயன்பாடு அதிகரித்து வந்தது.

ரசாயன உரங்களால் மண்வளம் பாதிக்கப்படுவதோடு அதில் விளைவிக்ககூடிய தானியங்களை உண்ணும் மனித இனம் மட்டுமின்றி கால்நடைகள் உள்பட அனைத்து உயிரினங்களும் பல்வேறு நோய் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன.

சமீப காலமாக ரசாயன உரங்கள் தட்டுப்பாடு, மற்றும் விலை உயர்வு காரணமாக சில விவசாயிகள் மீண்டும் இயற்கை உரத்திற்கு மாறி வருகின்றனர்.

வயல்களில் ஆடுகள், மாடுகள் உள்ள கால்நடைகளை அடைத்து வைப்பதன் மூலம் கால்நடைகளின் சாணம், புளுக்கை மற்றும் கழிவு விவசாய நிலங்களுக்கு மீண்டும் இயற்கை உரம் சிறந்த இயற்கை உரமாக கிடைக்கிறது.

இதற்காக இராமநாதபுரம், அரியலூர், பெரம்பலூர் பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான செம்மறி ஆடுகள் தஞ்சை உள்பட டெல்டா மாவட்டங்களுக்கு மேய்ச்சலுக்காகவும் இயற்கை உரத்திற்காக கொண்டு வரப்பட்டு ஆடுகளின் கழிவுகளை இயற்கை உரமாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும், கிடை அமைக்கும் பணிகளில் தொழிலாளிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து ஏலாகுறிச்சி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளர் கூறியதாவது:-

டெல்டா மாவட்டங்களில் அறுவடை பணிகள் முடிந்தவுடன் சுற்றுப்பகுதி கிராமங்களில் இருந்து ஆடு, மாடுகளை சேகரித்து மேய்ச்சலுக்காக கொண்டு வந்து சுமார் 5 மாதம் வரை இங்கேயே கிடை அமைத்து தங்கி மேய்ச்சலில் ஈடுபடுத்துவோம்.

ஒரு இரவுக்கு கிடை வைக்க 2 ஆயிரம் பணம் மற்றும் 3 படி அரிசியை கூலியாக பெறுவோம் என்றார்.

Tags:    

Similar News