மாரியப்பன்
விவசாயி வெட்டிக்கொலை: கொலையாளியை பிடிக்க தனிப்படை அமைப்பு
- கொலை செய்யப் பட்டு 2 நாட்களுக்கு மேல் இருக்கும் என்பதால் உடல் அழுகிய நிலையில் இருந்தது.
- மர்ம நபர்கள் அவருடைய கை, கால்களை வெட்டி கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள மொள்ளம்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன் என்கிற கூலுவகுத்தான் (வயது75). விவசாயி.
இவருக்கு 3 சகோதரர்களும், ஒரு சகோதரியும் உள்ளனர். அனைவரும் தனித்தனியாக குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். மேலும் தனித்தனியாக விவசாயம் செய்து வந்தனர். மாரியப் பனுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற மாரியப்பன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரை குடும்பத்தினர் பல இடங்களில் தேடி வந்தனர்.
இந்த நிலையில், ராயக்கோட்டை அருகே உள்ளுகுறுக்கை பக்கமுள்ள நல்லராலப்பள்ளியில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் கை, கால்கள் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் ஆண் பிணம் கிடப்பதாக ராயக்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி, ராயக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அதில் கொலை செய்யப்பட்டு கிடந்தது காணாமல் போன மாரியப்பன் என்று தெரிய வந்தது. மேலும் அவர் கொலை செய்யப்பட்டு 2 நாட்களுக்கு மேல் இருக்கும் என்பதால் உடல் அழுகிய நிலையில் இருந்தது.
மர்ம நபர்கள் அவருடைய கை, கால்களை வெட்டி கொடூரமாக கொலை செய்துள்ளனர். இதையடுத்து போலீசார், விவசாயியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் மாரியப்பனை, அவரது தம்பி சின்னராஜின் மருமகன் மணி (35) என்பவர் சரமாரியாக வெட்டி கொலை செய்ததும், மணி தலைமறைவாகி விட்டதும் தெரியவந்தது. சொத்து பிரச்சினையில் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து ராயக்கோட்டை இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளி மணியை தேடி வருகின்றனர்.