உள்ளூர் செய்திகள்

ஆலங்குளம் அருகே குளத்தில் கரம்பை மண் எடுக்க போலி அனுமதி சீட்டு? - தாசில்தார் விசாரணை

Published On 2022-09-14 08:42 GMT   |   Update On 2022-09-14 08:42 GMT
  • ஆலங்குளம் தாலுகா சிவலார்குளம் பஞ்சாயத்தில் திருவேங்கடப்பேரி குளம் உள்ளது.
  • குளத்தில் 360 யூனிட் கரம்பை மண் எடுப்பதற்கு தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் சிற்றாறு வடிநில உப கோட்ட செயற்பொறியாளர் முன்னிலையில் ஆலங்குளத்தை சேர்ந்த ஒருவருக்கு அனுமதி வழங்கி உள்ளார்.

ஆலங்குளம்:

ஆலங்குளம் தாலுகா சிவலார்குளம் பஞ்சா யத்தில் திருவேங்கடப்பேரி குளம் உள்ளது.

மண் எடுக்க அனுமதி

இந்த குளத்தில் 360 யூனிட் கரம்பை மண் எடுப்பதற்கு தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் சிற்றாறு வடிநில உப கோட்ட செயற்பொறியாளர் முன்னிலையில் ஆலங்குளத்தை சேர்ந்த ஒருவருக்கு அனுமதி வழங்கி உள்ளார்.

அதன்படி கடந்த 6-ந் தேதி முதல் 10-ந்தேதி வரை காலை 8 மணியில் இருந்து மாலை 6 மணி வரை அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு கரம்பை மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் அனுமதி காலம் முடிந்த பின்னரும் அந்த குளத்தில் மண் எடுக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்தது.

தாசில்தார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குளம் தாசில்தார் பரிமளம் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று விசாரித்தனர். அவர்களுடைய அனுமதி சீட்டை வாங்கி பார்த்தபோது அதில் 12-ந் தேதி முதல் நாளை மறுநாள்(16-ந்தேதி) வரை கூடுதலாக 5 நாட்கள் கரம்பை மண் எடுப்பதற்கு அனுமதி இருந்தது.

எனினும் அந்த அனுமதி சீட்டு போலியானதா என்று தாசில்தார் சந்தேகம் அடைந்து விசாரித்து வருகிறார். இதற்கிடையே மாவட்ட கலெக்டர் அனுமதியின்றி பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூலமாக அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளதாகவும், உதவி செயற்பொறியாளர் கையொப்பமிட்டு போலியாக அனுமதி சீட்டு தயாரித்து அங்கு கரம்பை மண் எடுப்பதாகவும் தாசில்தாரிடம் சமூக ஆர்வலர்கள் புகார் கூறினர்.

இதையடுத்து அந்த அனுமதி சீட்டுகளை பறிமுதல் செய்து கலெக்டரின் அனுமதி இன்றி வழங்கப்பட்டதா என்று தாசில்தார் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News