உள்ளூர் செய்திகள்

சேலம் அரசு டவுன் பஸ்களில் பயணிகள் இறங்க வேண்டிய இடத்தை முன்கூட்டியே அறிவிக்கும் வசதி

Published On 2022-11-16 09:18 GMT   |   Update On 2022-11-16 09:18 GMT
  • பக்கத்தில் அமர்ந்திருப்ப வர்களிடம், இந்த ஸ்டாப் வந்ததும் கொஞ்சம் சொல்லுங்கள் அல்லது கண்டக்டரிடம் முன்கூட்டியே சொல்லி விடுகின்றனர்.
  • அப்படி இருந்தும் அவர்கள் மனதில் தோன்றுவது எப்போது நாம் இறங்கும் இடம் வரும்? அல்லது கடந்து விட்டோமா? என்ற பதட்டம் வேறு வரும்.

மாநகர, நகராட்சியில் டவுன் பஸ்களில் பயணம் செய்யும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

உள்ளூர் வாசிகள் தங்களின் இருப்பிடத்திற்கு செல்ல டவுன் பஸ்களில் பயணம் செய்யும்போது அவர்கள் இறங்க வேண்டிய இடம் வந்ததும் சுதாரித்துக் கொண்டு யாரையும் எதிர்பார்க்காமல் இறங்கி விடுவார்கள். ஆனால் வெளியூரில் இருந்து வரும் பயணிகள் அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு டவுன் பஸ்களில் பயணம் செய்தால், அவர்கள் இறங்க வேண்டிய இடம் எங்கு இருக்கிறது? என தெரியாமல் தடுமாறுவார்கள்.

பக்கத்தில் அமர்ந்திருப்ப வர்களிடம், இந்த ஸ்டாப் வந்ததும் கொஞ்சம் சொல்லுங்கள் அல்லது கண்டக்டரிடம் முன்கூட்டியே சொல்லி விடுகின்றனர். அப்படி இருந்தும் அவர்கள் மனதில் தோன்றுவது எப்போது நாம் இறங்கும் இடம் வரும்? அல்லது கடந்து விட்டோமா? என்ற பதட்டம் வேறு வரும்.

கண்டக்டரை பார்த்து கேட்கனுமா? அவர் வேறு முன்னாடியே நின்னுக்கிட்டு இருக்காரு. இறங்க வேண்டிய நாம் முன்னால் அமர்ந்திருந்தால் கண்டக்டர் பின்னாடி இருப்பார். இந்த படபடப்பு தினந்தோறும் வெளியூரில் இருந்து நகரத்திற்கு வரும் பயணிகளின் மனதில் அன்றாடம் இருக்கத்தான் செய்கிறது.

பஸ்சில் தூக்கம்

மேலும் ஒரு சில டவுன் பஸ்களில் கண்டக்டர் பேருந்து நிற்கும் இடத்தின் பெயரை சொல்வார். ஆனால் அது அவருக்கே கேட்காது. காரணம் பஸ் ஒலிபெருக்கியில் ஒலிக்கும் பாடல்கள் தான்.

ஒரு சிலர் பஸ்சில் ஏறியதும் தூங்கி விடுகிறார்கள். சிலர் பயணத்தின்போது கவனக்குறைவாக இருக்கி றார்கள். இதுபோன்ற நிகழ்வுகள் நிகழாமல் இருக்க வேண்டி மெட்ரோ ரெயில்களில் பயணிகளின் நலன் கருதி அடுத்து வரும் நிறுத்தம் குறித்து அறிவிக்கப்படுகிறது. மின்சார ரெயில்கள், பயணிகள் ரெயில்களில் டிஸ்பிளேயில் காண்பிக்கப்ப டுகிறது.

ஜி.பி.எஸ்.கருவி

இந்த நடைமுறையை பின்பற்றி தமிழகத்தில் உள்ள நகர பஸ்களிலும் அமல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.சென்னை மாநகர போக்குவரத்து கழகம், சேலம், நெல்லை, மதுரை கோட்ட நகர பஸ்களில் முதல் கட்டமாக 100 பஸ்களில் ஸ்பீக்கர் பொறுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

தற்போது இது விரிவுப்ப டுத்தப்பட்டு, மேலும் பல டவுன் பஸ்களில் ஸ்பீக்கர் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக டவுன் பஸ்களில் ஜி.பி.எஸ் கருவியுடன் கூடிய ஸ்பீக்கர் டிரைவரின் அருகிலும், நடுப்பகுதி, பின் படிக்கட்டின் எதிரில் என 3 இடங்களில் அமைக்கப்பட்டு உள்ளது.

பஸ்சை இயக்கியவுடன் பஸ் புறப்படும் இடத்தில் இருந்து சேரும் இடம் வரை நிறுத்துமிடம் குறித்து ஒலி பெருக்கியில் தெரிவிக்கிறது. தொடர்ந்து ஒவ்வொரு நிறுத்தம் நெருங்கும் முன்பாக பஸ் நிறுத்தம் குறித்து அறிவிக்கிறது. குறிப்பாக நாம் இறங்க வேண்டிய இடம் வருவதற்கு முன்பாகவே அடுத்து வருவது அண்ணா பூங்கா என்று, ஒவ்வொரு இடம் வருவதற்கு முன்பாக ஒலி பெருக்கி மூலம் தெரிவிக்கிறது.

15 பஸ்களில்...

சேலம் மாநகரில் சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து ஜங்சன், ஏற்காடு அடிவாரம் வரை இயங்கும் சுமார் 15 பஸ்களில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பல பஸ்களில் ஸ்பீக்கர் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த புதிய வசதி பயணிகள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News