உள்ளூர் செய்திகள்

அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் சிறுதானியங்களில் அதிக அளவு உள்ளது - கருத்தரங்கில் அதிகாரி பேச்சு

Published On 2023-02-01 10:38 GMT   |   Update On 2023-02-01 10:38 GMT
  • கோடை உழவு செய்தால் மண் வளம் பெருகுவதோடு மழை நீரை சேமிக்க முடியும்.
  • முகாமிற்கான ஏற்பாடுகளை உடுமலை வட்டார வேளாண் விரிவாக்க மைய அலுவலர்கள் செய்திருந்தனர்.

உடுமலை :

உலக சிறுதானியங்கள் ஆண்டை கொண்டாடும் வகையில், உடுமலை வேளாண் துறை சார்பில், ஊட்டச்சத்துமிக்க சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம் நடந்து வருகிறது.உடுமலையிலுள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில், ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்கள் அபிவிருத்திக்கான கருத்து கண்காட்சி அமைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது. வேளாண் உதவி இயக்குனர் தேவி தலைமை வகித்தார்.

உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்ட, மாவட்ட ஆலோசகர் அரசப்பன் பேசியதாவது:- நாம் அன்றாடம் நமது உணவில் அரிசி, கோதுமை உள்ளிட்டவற்றை அதிகளவு உணவில் சேர்த்துக் கொள்கிறோம். இதிலிருந்து கார்போஹைட்ரேட் சத்து மட்டுமே அதிகமாக கிடைக்கிறது. ஆனால் மனிதனின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள், விட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்களான சோளம், கம்பு, ராகி, சாமை, திைன, வரகு மற்றும் குதிரைவாலி ஆகியவற்றில் மிகவும் அதிகமாக உள்ளது.

எனவே ஊட்டச்சத்துமிக்க சிறுதானியங்களை நாம் அன்றாடம் உணவில் சேர்த்து கொள்ளவேண்டும். தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ரகங்களான, சோளம் கோ-32, கம்பு தன் சக்தி ரகங்களை பயிரிட்டால், அதிக மகசூல் மற்றும் வருவாய் கிடைக்கும். இதில், அதிக அளவு ஊட்டசத்துக்கள், விட்டமின்கள் உள்ளன. கோடை உழவு செய்தால் மண் வளம் பெருகுவதோடு மழை நீரை சேமிக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் சிறுதானியபயிர்கள் சாகுபடிக்கு விதைநேர்த்தி, ஊட்டமேற்றிய தொழுவுரம், உயிர் உரம், நுண்ணூட்டச்சத்து மற்றும் உயிரியல் பூச்சிக்கொல்லிகள் குறித்தும், அவற்றை பயன்படுத்தும் முறை குறித்தும் விளக்கினார்.இம்முகாமில் ஊட்டச்சத்து மிக்க தானியங்களான சோளம், கம்பு பயிர்கள் சாகுபடி தொழில் நுட்பங்கள் மற்றும் அவற்றின் பயன்கள் குறித்து, விரிவாக எழுதப்பட்டுள்ள விவசாயிகளுக்கான கையேட்டினை வெளியிட்டார்.

உடுமலை வட்டாரத்தில் செயல்படுத்தப்படும், மானிய திட்டங்கள் குறித்து துணை வேளாண் அலுவலர் கோவிந்தராஜன் விளக்கினார். முகாமிற்கான ஏற்பாடுகளை உடுமலை வட்டார வேளாண் விரிவாக்க மைய அலுவலர்கள் செய்திருந்தனர். 

Tags:    

Similar News