உள்ளூர் செய்திகள்

தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை

Published On 2022-12-15 15:04 IST   |   Update On 2022-12-15 15:04:00 IST
  • சம்பவத்தன்று நந்தகோபாலுக்கு சங்கர் போன் செய்து தான் தூக்குமாட்டி சாகப்போகிறேன் என்று கூறியுள்ளார்.
  • இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

பெருந்துறை:

நாமக்கல் மாவட்டம் முனியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 28). திருமணம் ஆகாத இவர் கூலி வேலை செய்து வருகிறார்.

இவருடைய பெற்றோர் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக சங்கர் சிறு வயதாக இருக்கும் பொழுது பிரிந்து சென்று விட்டனர்.

இவருக்கு ஒரு தம்பியும், ஒரு அக்காவும் உள்ளனர். 2 பேருக்கும் திருமணம் ஆகி தனியே சென்று விட்டனர். இவருடைய தம்பி பெருந்துறையில் உள்ள பவானி ரோடு, பாண்டியன் வீதியில் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார்.

சங்கர் கிடைக்கிற வேலைக்கு சென்று அதில் வரும் பணத்தை கொண்டு மது குடித்து விட்டு கிடைக்கிற இடத்தில் படுத்துக்கொள்வார்.

இந்நிலையில் கடந்த 10 வருடங்களாக சங்கர் தனது பெற்றோரை நினைத்து வேதனையில் தூக்குமாட்டி இறந்து விடுவேன் என தம்பி நந்தகோபாலிடம் அடிக்கடி கூறி இருந்துள்ளார்.

சம்பவத்தன்று காலை நந்தகோபால் வேலை செய்யும் கறிக்கடைக்கு சங்கர் வந்துள்ளார். கடையில் யாரும் இல்லாத போது நந்தகோபாலுக்கு சங்கர் போன் செய்து தான் தூக்குமாட்டி சாகப்போகிறேன் என்று கூறியுள்ளார்.

அதற்கு நந்தகோபால் அவர் எப்பொழுதும் போல நடிக்கிறார் என நினைத்து போனை ஆப் செய்து விட்டார்.

பின்னர் மதியம் கறிக்கடைக்கு சென்று பார்த்த போது சங்கர் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்து நந்தகோபால் அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சங்கர் இறந்து விட்டதாக கூறினர்.

இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Tags:    

Similar News