உள்ளூர் செய்திகள்

மதிய உணவு சாப்பிட்ட பள்ளி குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம்

Published On 2023-02-11 09:40 GMT   |   Update On 2023-02-11 09:40 GMT
  • வாந்தி, வயிற்று வலி, மயக்கம் இருந்ததாக அந்தியூர் அரசு மருத்துவமனையில் 29 மாணவர்கள் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
  • இச்சம்பவம் குறித்து அந்தியூர் தாசில்தார் மற்றும் பவானி டி.எஸ்பி. தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஆப்பக்கூடல்:

ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அடுத்த அத்தாணி அருகே கரட்டூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 157 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

தலைமையாசிரியர் விஜயலட்சுமி உள்பட 5 ஆசிரியர்கள் பள்ளியில் பணியாற்றி வருகின்றனர். கரட்டூர் பகுதியை சேர்ந்த வள்ளியம்மாள் சமையலராக கடந்த 20 வருடங்களாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் பள்ளியில் படிக்கும் 132 மாணவ-மாணவிகள் நேற்று வழக்கம் போல 12 மணிக்கு மதிய உணவு சாப்பிட சென்றனர். வெஜிடபிள் சாப்பாடு மதிய உணவாக சமைக்கப்பட்டது.

அப்போது ஒரு சில மாணவிகள் உணவில் ஏதோ கிடப்பதாக எடுத்து வந்து சமையலர் வள்ளியம்மாளிடம் கொடுத்த போது மீதி உள்ள உணவை யாரும் சாப்பிட வேண்டாம் என்று அவர் நிறுத்தியுள்ளார்.

இந்நிலையில் பள்ளி முடிந்து மாலையில் வீடு திரும்பிய ஒரு சில மாணவ, மாணவிகள் மதிய உணவில் பல்லி கிடந்ததாக அவரவர் வீட்டில் பேசி வரும் போது வாந்தி, மயக்கம் வந்ததாக கூறப்படுகிறது.

ஒரு சில பள்ளி குழந்தைகளை பெற்றோர்கள் அத்தாணி கருவல்வாடிபுதூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

இத்தகவல் பரவிய நிலையில் பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகளை பெற்றோர்கள் கருவல்வாடிபுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சை அழைத்து சென்னர்.

இதைத்தொடர்ந்து வாந்தி, வயிற்று வலி, மயக்கம் இருந்ததாக அந்தியூர் அரசு மருத்துவமனையில் 29 மாணவ, மாணவிகள் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

இத்தகவலறிந்த அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. அரசு மருத்துவமனைக்கு நேரில் வந்து விசாரித்ததோடு, குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

பல்லி விழுந்த மதிய உணவை சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.

இச்சம்பவம் குறித்து அந்தியூர் தாசில்தார் மற்றும் பவானி டி.எஸ்பி. தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கரட்டூர் அரசு நடுநிலைப்பள்ளியில் உள்ள பயன்படுத்தப்படும் தண்ணீர் மற்றும் மதிய உணவுகளின் மாதிரிகளை எடுத்து இந்த உணவில் விஷத்தன்மை கலந்து உள்ளதா? என்பதை ஆய்வு செய்ய உணவு கட்டுப்பாடு அதிகாரிகள் கோவையில் உள்ள பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளதாக ஆப்பக்கூடல் போலீசார் தெரிவித்தனர்.

பரிசோதனைக்கு பின்னரே மதிய உணவில் பல்லி விழுந்து விஷம் கலந்து இருக்குமா? இல்லை வேறு ஏதேனும் காரணம் இருக்குமா? என்று தெரியவரும்.

Tags:    

Similar News