உள்ளூர் செய்திகள்

கருவூலத்தில் பாதுகாப்பு பெட்டியில் இருந்த நகை- பணம் மாயமானதால் பரபரப்பு

Published On 2023-06-07 07:20 GMT   |   Update On 2023-06-07 07:20 GMT
  • கோபிசெட்டிபாளையம் கோர்ட்டு பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்து பூட்டி சீல் வைக்கப்படும்.
  • ஆணி கழட்டப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

கோபி, 

கோபிசெட்டிபாளைய த்தில் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு உள்பட 5 கோர்ட்டுகள் செயல்பட்டு வருகிறது.

இங்கு சத்தியமங்கலம் வனப்பகுதி வழக்கு, கோபி செட்டிபாளையம், பங்களா புதூர் போலீஸ் நிலையங்களில் போடப்பட்ட வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட நகை, பணம் ஆகியவை கோபிசெட்டிபாளையம் கோர்ட்டு பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்து பூட்டி சீல் வைக்கப்படும். இதை யடுத்து அந்த பெட்டகம் கோபிசெட்டிபாளையம் கருவூலத்தில் பாது காப்பாக வைக்கப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் கோர்ட்டு ஊழியர் மற்றும் பங்களா புதூர் போலீசார் வழக்கு விசாரணைக்காக முதலாம் வகுப்பு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு தொடர்புடைய பெட்டகத்தை கோபிசெட்டி பாளையம் கருவூலத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் கொண்டு வந்தனர்.

இதை தொடர்ந்து அந்த பெட்டியை நீதிபதி தனது அறையில் வைத்து திறக்க முயன்றார். அப்போது பெட்டியின் பூட்டின் மேல் வைக்கப்பட்டு இருந்த அரக்கு சீல் உடைக்கப்படா மல் அப்படியே இருந்தது. ஆனால் பெட்டியின் பூட்டு மாட்டி இருந்த கொண்டியில் இருந்து ஆணி கழட்டப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் பெட்டியை திறந்து பார்த்தனர்.

அப்போது அதில் கடம்பூர் போலீசாரால் பறிமுதல் செய்து கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டு இருந்த 48 கிராம் எடை கொண்ட 2 தங்க ஆரம், சத்தியமங்கலம் வனத்துறை மற்றும் பங்களா புதூர், கோபிசெட்டிபாளையம் போலீசார் பறிமுதல் செய்து வைக்கப்பட்டு இருந்த ரூ. 3 ஆயிரத்து 255 பணம் மாயமாகி இருந்தது தெரிய வந்தது.

இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.மேலும் கைரேகை பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்து தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இத னால் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News