உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

விளக்கம் கேட்டு தலைமை ஆசிரியைக்கு நோட்டீஸ்

Published On 2023-03-24 15:33 IST   |   Update On 2023-03-24 15:33:00 IST
  • மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திலும் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.
  • தலைமை ஆசிரியை விளக்கம் அளிக்க கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஈரோடு:

ஈரோடு ரெயில்வே காலனி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கான அறிவியல் பாட செய்முறைத்தேர்வு கடந்த 20-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

இந்த தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்த தனித்தேர்வரான அந்தியூரை சேர்ந்த ஆம்புலன்சு டிரைவர் மணிகண்டன் (வயது 25) என்பவர் நேற்று பள்ளிக்கு சென்றார்.

அப்போது அங்கு பணியில் இருந்த தலைமை ஆசிரியை மணிகண்டனிடம் பயிற்சி வகுப்புக்கு முறையாக வராததால் செய்முறை தேர்வுக்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்றால் ஏ 4 அளவு கொண்ட வெள்ளை காகிதம் 4 பண்டல்களை வாங்கி வந்து கொடுக்க வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது.

இதனால் மணிகண்டனும் அருகில் உள்ள கடைக்கு சென்று வெள்ளை காகித பண்டல்களை வாங்கி வந்தார்.

இதேபோல் நன்னடத்தை சான்றிதழ் வாங்க வந்த ஒரு வாலிபரிடமும் 2 பண்டல்கள் வெள்ளை காகிதம் வாங்கி வர சொன்னதாக கூறப்படுகிறது.

இதனால் மணி கண்டன் ஆசிரியை களிடம் வாக்குவாதத்தில் ஈடு பட்டார். இது பற்றிய தகவல் கிடைத்ததும் சூரம்பட்டி போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது தலைமை ஆசிரியை கூறுகையில், "இந்த பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் தாங்களாகவே முன்வந்து பல்வேறு பொருட்களை வாங்கி கொடுத்து இருக்கிறார்கள்.

அதுபோல் வெள்ளை காகித பண்டல்களையும் விருப்பத்தின்பேரில் வாங்கி கொடுத்தார்கள். ஆனால் மணிகண்டனிடம் நாங்கள் காகித பண்டல்களை வாங்கி வரச்சொல்லி கேட்க வில்லை" என்று கூறினார்.

இதையடுத்து மணிகண்டனை போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திலும் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி நடந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட பள்ளியை சேர்ந்த தலைமை ஆசிரியை விளக்கம் அளிக்க கேட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் சார்பில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Tags:    

Similar News