உள்ளூர் செய்திகள்

திரவ உயிர் உரங்களை பயன் படுத்தி அதிக மகசூல் பெறலாம்

Published On 2022-09-20 09:23 GMT   |   Update On 2022-09-20 09:23 GMT
  • அங்கக வேளாண்மையில் இயற்கை உரமான உயிர் உரங்கள் ஓர் முக்கிய பங்கு வகுக்கிறது
  • சாம்பல் சத்துமண்ணில் அதிக அளவு இருந்தாலும் 2 சதவீதம் மட்டுமே பயிர்களால் எடுத்து கொள்ளும் வகையில் உள்ளது.

ஈரோடு, செப். 20-

கொடுமுடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் யசோதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி யிருப்பதாவது:

அங்கக வேளாண்மையில் இயற்கை உரமான உயிர் உரங்கள் ஓர் முக்கிய பங்கு வகுக்கிறது. காற்றில் இருக்கும் தழைச்சத்தை நிலை நிறுத்தி, மண்ணில் கரையாத நிலையில் உள்ள மணிச்சத்து, சாம்பல் சத்தை கரைத்து, நுண்ணூட்ட சத்துக்களை உறிஞ்சி கொடுக்கும் திறன் மிக்க பாக்டீரியாக்கள் மூலம் உயிர் உரம் தயாரிக்கப் படுகிறது.

தழைச்சத்திற்கு அசோஸ் பைரில்லம், ரைசோபியம் போன்ற உயிர் உரங்களையும் மணிச்சத்திற்கு பாஸ்போ பாக்டீரியா உயிர் உரங்களையும் பயன் படுத்தலாம். மேலும் பொட்டாஷ் மண்ணில் உள்ள சாம்பல் சத்தை கரைத்து பயிருக்கு அளிக்கக் கூடியது.

சாம்பல் சத்துமண்ணில் அதிக அளவு இருந்தாலும் 2 சதவீதம் மட்டுமே பயிர்களால் எடுத்து கொள்ளும் வகையில் உள்ளது. அத்தகைய மண்ணில் கரையாத நிலை யில் உள்ள சாம்பல் சத்தை கரைத்து பயிர்கள் எடுத்து கொள்ளும் வகையில் அளிக்க வல்லது இந்த பாக்டீரியா மேலும் வறண்ட சூழ்நிலையில் பயிர்கள் வெப்பத்தை தாங்கி வளர வழி வகுக்கிறது.

சரியான ஒளிச் சேர்க்கைக்கும் உதவுகிறது. மணிகளின் எடையை அதிகரித்து மகசூலை 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை அதிகரிக்கிறது.

திரவ உயிர் உரங்களைக் கொண்டு நெல் விதை நேர்த்தி செய்ய ஒரு ஏக்கருக்கு தேவையான விதையுடன் 50 மில்லி லிட்டர் கலந்து பின் தெளிக்கலாம்.

ஒரு ஏக்கர் நாற்றுகளுக்கு 100 மில்லி லிட்டர, திரவ உயிர் உரத்தை தேவையான அளவு தண்ணீரில் கலந்து நாற்றின் வோப் பகுதி நன்கு நனையுமாறு 30 நிமிடங்கள் வைத்து பின் நடவு செய்ய வேண்டும்.

அடி உரமாக ஒரு ஏக்கருக்கு 200 மில்லி லிட்டர் திரவ உயிர் உரத்தை தொழு உரத்துடன் நன்கு கலந்து நடவுக்கு முன் வயலில் இட வேண்டும்.

ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு மில்லி லிட்டர் திரவ உயிர் உரம் என்ற அளவில் கலந்து விதைப்பு செய்யப்பட்ட நாளில் இருந்து 15, 30 மற்றும் 45-வது நாட்களில் பயிர்களில் படும்படி தெளிக்கலாம். உழவர்கள் திரவ உயிர் உரங்களை பயன் படுத்துவதன் மூலம் அதிக மகசூல் எடுக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News