உள்ளூர் செய்திகள்

நாயை கொன்று முகநூலில் பதிவிட்ட வாலிபர் சிறையில் அடைப்பு

Published On 2023-03-14 07:49 GMT   |   Update On 2023-03-14 07:49 GMT
  • நாயை கொன்று படத்தை முகநூலில் பதிவிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
  • இதனையடுத்து தினேஷ் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தபட்டு கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னிமலை:

சென்னிமலை அருகே செருப்பின் மீது நாய் அசிங்கம் செய்ததால் நாயை கொன்று அதன் படத்தை முகநூலில் பதிவிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

முகநூல் பக்கத்தில் கடந்த 9-ந் தேதி இறந்து கிடந்த நாயின் புகைப்படம் ஒன்றை ஒருவர் பதிவிட்டு அதில் "தான் வாங்கி வெச்ச புது செருப்புல அடிக்கடி அசிங்கம் செய்து வந்ததால் போட்டு தள்ளிட்டேன்" என பதிவிட்டு இருந்தார்.

இதனை பார்த்த ஈரோடு பழையபாளையம், சுத்தானந்தன் நகரில் வசிக்கும் விலங்குகள் நல அமைப்பை சேர்ந்த பிரேம்குமார் என்பவர், நாயை கொன்று முகநூலில் பதிவிட்ட நபர் மீது விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னிமலை போலீசில் புகார் செய்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தபோது, நாயை கொன்று முகநூலில் பதிவிட்ட நபர் தேனி மாவட்டம், பெரியகுளம், மங்களம் பகுதியை சேர்ந்த தினேஷ் (வயது 25) என்றும்,

இவர் தற்போது ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே ஈங்கூரில் தங்கியிருந்து கட்டுமான பணிகளுக்கு சென்ட்ரிங் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து தலைமறைவாக இருந்த தினேசை கைது செய்ய போலீசார் தேடி வந்த நிலையில் சென்னிமலை அருகே ஈங்கூர் நால்ரோடு பகுதியில் தினேஷ் இருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது.

பின்னர் உடனடியாக விரைந்து சென்று அவரை கைது செய்தனர். இதனையடுத்து தினேஷ் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தபட்டு கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News