உள்ளூர் செய்திகள்

விளாமுண்டி வனப்பகுதியில் ரோட்டில் இரவில் உலா வந்த ஒற்றை யானை.

விளாமுண்டி வனப்பகுதியில் இருந்து ரோட்டுக்கு வந்த ஒற்றை யானை

Published On 2023-04-28 14:54 IST   |   Update On 2023-04-28 14:54:00 IST
  • வனப்பகுதியில் இருந்து உணவு தேடி ஒற்றை காட்டு யானை வெளியே வந்தது.
  • இந்த யானையால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வன சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் யானை, கரடி, சிறுத்தை, மான், புலி, காட்டு பன்றிகள் உள்பட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன.

அடர்ந்த வனப்பகுதியான இந்த பகுதியில் திண்டுக்கல்-மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலை வழியாக தினமும், கார், பஸ், வேன், இரு சக்கர வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த நிலையில் வனப்பகுதிகளில் இருந்து யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி அடிக்கடி வெளியேறி வருகிறது. அப்படி வரும் யானைகள் ரோட்டில் உலா வருவதும்,

அந்த வழியாக லாரிகளில் கொண்டு செல்லும் கரும்புகளை ருசித்து செல்வதும் அடிக்கடி நடந்து வருகிறது. மேலும் அந்த வழியாக வரும் வாகனங்களை யானைகள் வழி மறிக்கும் சம்பவங்களும் நடக்கிறது.

இந்நிலையில் இரவு சத்தியமங்கத்தில் இருந்து கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் விளாமுண்டி வனப்பகுதியில் இருந்து உணவு தேடி ஒற்றை காட்டு யானை வெளியே வந்தது. இந்த யானையால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சத்தியமங்கலத்தில் இருந்து கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலை அதிக வாகனங்கள் செல்லும் சாலையாகும். இந்த ரோட்டில் ஒற்றை யானை வந்ததால் இதை கண்ட வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து வாகனங்களை ரோட்டோரம் நிறுத்தினர்.

இது குறித்து வாகன ஓட்டிகள் உடனடியாக விளாமுண்டி வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து வனச்சரகர் செங்கோட்டையன் தலைமையில் வனக்குழு சம்பவ இடத்திற்கு வந்து பட்டாசு வெடித்தும் மற்றும் அவர்கள் வந்த வாகனங்கள் மூலம் அதிக ஒலி எழுப்பியும் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

Tags:    

Similar News