உள்ளூர் செய்திகள்

134 கடைகள், 63 ரேக்குகளுடன் கட்டப்படும் நவீன பஸ் நிலையம் 2024-ம் ஆண்டு ஆகஸ்டுக்குள் முடிக்க திட்டம்

Published On 2023-03-18 15:31 IST   |   Update On 2023-03-18 15:31:00 IST
  • 19.9 ஏக்கரில் பஸ் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.
  • தற்போது பஸ் நிலையம் கட்டுமான பணிகள் 30 சதவீதம் முடிவடைந்துள்ளது.

ஈரோடு:

ஈரோடு மாநகரில் பஸ்நிலையம் செயல்பட்டு வருகிறது. சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இங்கு இருந்து தான் தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

அதோடு மினி பஸ்களும் இங்கு இருந்து தான் இயக்கப்பட்டு வருகிறது.

ஒரே நேரத்தில் தினமும் ஏராளமான பஸ்கள் வந்து செல்கிறது. தினமும் சுமார் 4,100 முறை பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இதனால் எப்போது பார்த்தாலும் பஸ் நிலையம், மேட்டூர் ரோடு, சத்திரோடு பகுதிகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இதனால் மதுரை, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் சோலார் பகுதியில் வந்து செல்லும் வகையில் புதிய பஸ்நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதே போல் சோலார் பகுதியில் தற்காலிக பஸ் நிலையமும் கட்டப்பட்டு திறப்பு விழாவுக்கு தயார்நிலையில் உள்ளது.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் 10-ந் தேதி காணொலி காட்சி மூலம் மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.

அப்போது 2 பஸ் நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் அறிவித்தார்.

அதன் படி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18-ந் தேதி ஈரோட்டுக்கு வருகை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சோலார் புஞ்சை லக்காபுரத்தில் நவீன பஸ் நிலையம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

இதையடுத்து 24 ஏக்கர் பரப்பளவில் ரூ.63.50கோடியில் இந்த புதிய பஸ் நிலையம் கட்டும் பணி தொடங்கியது. அதன்படி 79 ஆயிரத்து 666 சதுரமீட்டர் பரப்பளவில் பஸ்நிலையம் அமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

தரைதளம் 7,746 சதுரமீட்டர் பரப்பிலும், முதல் தளம் 4,260 சதுரமீட்டர் பரப்பிலும், நடைமேடை பரப்பளவு 5,378 சதுரமீட்டர் மற்றும் சுழற்சி பகுதி 3,317 சதுரமீட்டர் பரப்பளவிலும் கட்டப்படுகிறது.

இது தவிர பஸ் நிலையத்தில் 134 கடைகள், 63 பஸ் ரேக்குகள், டவுன் பஸ்களுக்கு 9 பிரத்யேக ரேக்குகள், 883 இருசக்கர வாகனங்கள் நிறுத்த இடம், 100 வாகனங்கள் நிற்கும் வகையில் ஆட்டோ பார்க்கிங் ஸ்டேண்டு, முன்பதிவு செய்யும் இடம், கழிப்பறைகள், ஓட்டல்கள், நேரம் காப்பாளர் அறை மற்றும் பிற அத்தியாவசிய வசதிகளும் பயணிகளுக்காக செய்யப்படுகிறது.

மாநகராட்சிக்கு சொந்தமான 51.4 ஏக்கர் நிலத்தில் 19.9 ஏக்கரில் பஸ் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.

தற்போது பஸ் நிலையம் கட்டுமான பணிகள் 30 சதவீதம் முடிவடைந்துள்ள நிலையில் அடுத்த ஆண்டு 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் இந்த பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News