போடி ரெயில் நிலையத்துக்கு வந்த சோதனை ரெயில்.
தேனி-போடி வழித்தடம்: சோதனை ரெயிலில் உற்சாகமாக பயணித்த ஊழியர்கள்
- சோதனை ஓட்டம் பதிவேடாக பதிவு செய்து அதிகாரிகளின் ஆய்வுக்கு அனுப்பப்பட உள்ளதாக மதுரை கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
- சோதனை ஓட்ட த்தின் போது பயணிகளு க்கான வசதி, சிக்னல்கள் இயக்கம், ஊழியர்களுக்கான வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன.
மேலசொக்கநாதபுரம்:
தேனி - மதுரை இடையே அகல ரெயில் பாதை பணிகள் நிறைவடைந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் போடி - தேனி இடையே 15 கி.மீ தூரத்துக்கு ரெயில் பாதை பணிகள் அண்மையில் நிறைவடைந்தன. இந்த வழித்தடத்தில் ரெயிலை இயக்கி சோதனை நடத்த ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் அனுமதி வழங்கினார்.
இதையடுத்து ரெயில் பாதை அதிர்வு, சிக்னல்கள் செயல்பாடு குறித்து சோதனை நடத்தப்பட்டது. அதன்படி தேனியில் இருந்து 12 பெட்டிகளுடன் இன்று சிறப்பு ரெயில் ஒத்திகைக்காக இயக்கப்பட்டது. இதற்காக மதுரையில் இருந்து தேனி வந்த ரெயில் இங்கிருந்து போடிக்கு சோதனைக்காக இயக்கப்பட்டது. தேனியில் இருந்து காலை 9.45 மணிக்கு புறப்பட்ட சிறப்பு ரெயிலில் போடியில் பணிபுரியும் ஊழியர்கள், அலுவலர்கள் பயணம் செய்தனர். இந்த சோதனை ஓட்டம் பதிவேடாக பதிவு செய்து அதிகாரிகளின் ஆய்வுக்கு அனுப்பப்பட உள்ளதாக மதுரை கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சோதனை ஓட்ட த்தின் போது பயணிகளு க்கான வசதி, சிக்னல்கள் இயக்கம், ஊழியர்களுக்கான வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன. பின்னர் இந்த ரெயில் இன்று மாலை 5.30 மணிக்கு போடியில் இருந்து புறப்பட்டு தேனிக்கு செல்கிறது. அதனைத் தொடர்ந்து வழக்கம் போல் மதுரைக்கு பயணிகளுடன் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
ரெயில்வே சோதனை ஓட்டத்தின் போது பொது மக்கள் தண்டவாளங்களை கடக்க வேண்டாம் என ரெயில்வே துறை அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். சோதனை ரெயிலில் ரெயில்வே ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் உற்சாகமாக பயணம் மேற்கொண்டனர். இதனை ரெயில் நிலையத்தில் நின்றிருந்த பொதுமக்களும் கைகளை காட்டி ரசித்தனர்.