தேனியில் இன்று மாலை ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம்- எடப்பாடி பழனிசாமி சிறப்புரை
- பொதுக்கூட்டத்திற்கு 50,000-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. தொண்டர்களை திரட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
- 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆண்டிபட்டி:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு தேனி அருகே மதுராபுரியில் இன்று மாலை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதற்காக அவர் சேலத்தில் இருந்து இன்று மதியம் தேனிக்கு வருகிறார். அவருக்கு திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்ட எல்லையில் உற்சாக வரவேற்பு அளிக்க அ.தி.மு.க.வினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
பொதுக்கூட்டத்திற்கு 50,000-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. தொண்டர்களை திரட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் பொதுக்கூட்டத்தையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் மேற்பார்வையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஆண்டிபட்டியில் பொதுமக்களிடம் ஆதரவு திரட்டுவதற்காக வந்த முன்னாள் அமைச்சர் உதயகுமார் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
மேலும் அ.தி.மு.க. தேனி மாவட்ட செயலாளர்கள் முருக்கோடை ராமர், ஜக்கையன், ஆண்டிபட்டி ஒன்றிய செயலாளர்கள் லோகிராஜன், வரதராஜன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகளுடன் ஆண்டிபட்டி பஸ் நிலையம் வழியாக ஊர்வலமாக சென்று பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி பொதுக்கூட்டத்திற்கு ஆதரவு திரட்டினர். ஆண்டிபட்டி பழைய முருகன் தியேட்டர் அருகில் ஊர்வலத்தை நிறைவு செய்தனர். இந்நிகழ்ச்சியில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.