உள்ளூர் செய்திகள்

ஈஸ்டர் பண்டிகை-கோவையில் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு திருப்பலி

Published On 2023-04-09 09:19 GMT   |   Update On 2023-04-09 09:19 GMT
  • சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயத்தில் ஆயர் டேவிட் பர்ணபாஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது.
  • மாநகரின் முக்கிய பகுதிகளில் இரவு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

கோவை

ஏசு கிறிஸ்து உயிர்த்தெழும் நிகழ்வை ஈஸ்டர் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர். நேற்று இரவு ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது.

இதனையொட்டி கோவை மாநகரில் உள்ள காட்டூர் கிறிஸ்து அரசர் ஆலயம், உப்பிலிபாளையம் இம்மானுவேல் ஆலயம், டவுன்ஹால் புனித மைக்கேல் ஆலயம், திருச்சி ரோடு கிறிஸ்துநாதர் ஆலயம், புலியகுளம் அந்தோணியார் ஆலயம் உள்பட கிறிஸ்தவ தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடந்தது.

இந்த திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்றனர்.

ஈஸ்டர் பண்டிகையையொட்டி கோவை காந்திபுரத்தில் உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயத்தில் ஆயர் டேவிட் பர்ணபாஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. திருப்பலியின் போது ஏசு கிறிஸ்துவின் உயிர்ப்பு நிகழ்வு தத்ரூபமாக நிகழ்த்தி காண்பிக்கப்பட்டது. அதன் பின்னர் கிறிஸ்தவர்கள் ஒருவருக்கு ஒருவர் தங்களது ஈஸ்டர் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தனர்.

ஈஸ்டர் பண்டிகையை யொட்டி அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க அனைத்து ஆலயங்கள் முன்பும் மாநகரின் முக்கிய பகுதிகளில் இரவு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Tags:    

Similar News