உள்ளூர் செய்திகள்

ராதாபுரம் சுற்றுவட்டாரத்தில் பணியாளர்கள் பற்றாக்குறையால் குடிநீர் வினியோகத்தில் சிக்கல்-கலெக்டர் விஷ்ணுவிடம் மனு

Published On 2022-09-28 09:14 GMT   |   Update On 2022-09-28 09:14 GMT
  • நாங்குநேரி, திசையன்விளை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் சுமார் 248 குடியிருப்புக்கான தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் கடந்த 2002-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
  • இந்த திட்டம் தொடங்கி 20 வருடங்கள் ஆகியுள்ள நிலையில் 80 பேர் பணியாற்ற வேண்டிய இடத்தில் 45 ஒப்பந்த பணியாளர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.

பணகுடி:

நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணுவுக்கு, பா.ஜனதா ராதாபுரம் தெற்கு ஒன்றிய ஊடக பிரிவு தலைவர் காமராஜ் அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

பற்றாக்குறை

நாங்குநேரி, திசையன்விளை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் சுமார் 248 குடியிருப்புக்கான தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் கடந்த 2002-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. நெல்லை தாமிரபரணியில் தொடங்கி இந்த திட்டம் பத்தமடை, சிங்கிகுளம், ராதாபுரம், வடக்கன்குளம் ,ஆவரைகுளம், நாங்குநேரி, திசையன்விளை பேரூராட்சி உட்பட 15 நீரேற்றும் நிலையங்களை கொண்டுள்ளது.

ஒரு நீரேற்று நிலையத்திற்கு எலக்ட்ரீசியன், காவலாளி, ஆபரேட்டர்கள் பணியாற்ற வேண்டும். இந்த திட்டம் தொடங்கி 20 வருடங்கள் ஆகியுள்ள நிலையில் 80 பேர் பணியாற்ற வேண்டிய இடத்தில் 45 ஒப்பந்த பணியாளர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ரூ.7 ஆயிரம் மட்டுமே சம்பளமாக வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

குடிநீர் வினியோகம் பாதிப்பு

சமீபத்தில் ஒப்பந்தம் எடுத்த ஒரு நிறுவனம் 45 பணியாளர்கள் இருந்த இடத்தில் 15 பணியாளர்களாக குறைத்துவிட்டது. இதனால் பல பகுதிகளில் உள்ள நீரேற்று நிலையங்களில் பம்பு ஆபரேட்டர்கள் இல்லாமல் நீர் விநியோகிப்பதில் கடும் சிக்கல் நிலவி வருகிறது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் தான் இந்த திட்டத்தின் கீழ் வரக்கூடிய அனைத்து கிராமங்களுக்கும் தங்கு தடையின்றி தாமிரபரணி குடிநீர் வழங்க முடியும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Tags:    

Similar News