அதிவேகமாக டூவீலர்களை ஓட்டி சென்று சாகசம் செய்பவர்கள் மீது நடவடிக்கை- ஓசூர் பகுதி பொதுமக்கள் கோரிக்கை
- வாகனங்களுக்கு இடையூறாக சாலைகளில் வட்டமிட்டவாறு சாகச பயணமாக நினைத்து இருசக்கர வாகனங்களை ஓட்டிச்செல்வது அதிகரித்து வருகிறது.
- காதை பிளக்கும் வகையில் ஹாரன் அடித்துச் செல்வதும் அதிகரித்துள்ளது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி பகுதிகளிலும், மற்றும் கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலை, ஓசூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையிலும், சில இளைஞர்கள் அதிவேகமாக இருசக்கர வாகனங்களை இயக்குவது மட்டுமின்றி, முன் சக்கரத்தை (வீலிங்) உயர்த்தியபடி வாகனங்களுக்கு இடையூறாக சாலைகளில் வட்டமிட்டவாறு சாகச பயணமாக நினைத்து இருசக்கர வாகனங்களை ஓட்டிச்செல்வது அதிகரித்து வருகிறது.
மற்ற வாகன ஓட்டிகளை, இடிக்கும் வகையில் வாகனங்களை ஓட்டும் இவர்களால், நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
தவிர, சிறுவர்களும் மோட்டார் சைக்கிள்களையும், ஸ்கூட்டர்களையும் ஓசூர் நகர பகுதிகளில் சர்வ சாதாரணமாக ஓட்டிச்செல்வதும், மற்றவர்களுக்கு இடையூறு செய்து, காதை பிளக்கும் வகையில் ஹாரன் அடித்துச் செல்வதும் அதிகரித்துவிட்டதால், சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களும், இரு சக்கர வாகன ஓட்டிகளும் அச்சமடைந்துள்ளனர்.
எனவே இதனை கட்டுப்படுத்தவும், அதிவேகமாக இருசக்கர வாகனங்களை ஓட்டி சாகசம் செய்பவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.