உள்ளூர் செய்திகள்

பழவேற்காடு அருகே மாநகர பஸ் கண்ணாடி கல்வீசி உடைப்பு: டிரைவர்-கண்டக்டர் புகார்

Published On 2023-10-07 10:47 GMT   |   Update On 2023-10-07 10:47 GMT
  • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
  • மாநகர பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களிடயே பெரும் பரபரப்பு காணப்பட்டது.

பொன்னேரி:

செங்குன்றத்தில் இருந்து பொன்னேரி வழியாக பழவேற்காடு பகுதிக்கு மாநகர பஸ் இயக்கப்படுகிறது. நேற்று மாலை மாநகர பஸ் செங்குன்றத்திலிருந்து பழவேற்காட்டிற்கு 20-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. பழவேற்காடு அருகேயுள்ள பிரளயம் பாக்கம் பகுதியில் வந்த போது பஸ் ஜன்னல் கண்ணாடி மீது மர்ம நபர் கல் வீசி தாக்கினார்.

இதில் பஸ் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பித்தனர். இதையடுத்து அந்த பஸ் அங்கேயே நிறுத்தப்பட்டது. பயணிகள் மாற்று வேறொரு பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் திருப்பாலைவனம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பஸ் கண்ணாடியை உடைத்த நபரை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் பழவேற்காட்டிற்கு வந்து கொண்டிருந்த சக பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் பழவேற்காடு பகுதிக்கு வரும் மாநகர பஸ் டிரைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும், இதே போன்று சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாகவும், திருப்பாலை வனம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். மேலும் இரவில் தங்கும் பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு தங்கும் அறை இல்லை எனவும், பஸ்சில் கொசு தொல்லையுடன் தூங்குவதாகவும், போதிய பாதுகாப்பு இல்லை எனவும், டிக்கெட் வசூல் பணத்தை வைப்பதற்கு போதிய பாதுகாப்பு இல்லை எனவும் தெரிவித்தனர். இதனால் மாநகர பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களிடயே பெரும் பரபரப்பு காணப்பட்டது.

Tags:    

Similar News