பேரணியின்போது செந்தில்குமார் எம்.எல்.ஏ. பேசிய காட்சி.
தி.மு.க. இளைஞரணி மோட்டார் சைக்கிள் பேரணிக்கு நிலக்கோட்டையில் வரவேற்பு
- சென்னையில் இருந்து வந்த தி.மு.க. இளைஞரணி மாநாட்டை வலியுறுத்தி மோட்டார் சைக்கிள் பேரணிக்கு நிலக்கோட்டை வரவேற்பு அளிக்கப்பட்டது.
- பேரணியில் செந்தில்குமார் எம்.எல்.ஏ. பேசினார்.
நிலக்கோட்டை:
சென்னையில் இருந்து வந்த தி.மு.க. இளைஞரணி மாநாட்டை வலியுறுத்தி மோட்டார் சைக்கிள் பேரணிக்கு நிலக்கோட்டை தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
7 ½ அடி மாலையை நிலக்கோட்டை தி.மு.க. பேரூர் சார்பாக நகரச் செயலாளர் ஜோசப் கோவில் பிள்ளை தலைமையில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ. அணிவித்தும், பட்டாசு வெடித்து வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து செந்தில்குமார் எம்.எல்.ஏ. பொதுக் கூட்டத்தில் பேசியதாவது:-
இந்தியாவில் நீட் தேர்வால் ஏராளமான மாணவ- மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் உடனே அகற்ற வலியுறுத்தி பேரணி நடத்தப்படுகிறது. இதற்கு மக்கள் அமோக ஆதரவளித்து வருகின்றனர் என பேசினார்.
கூட்டத்தில் ஒழிப்போம் ஒழிப்போம் நீட் தேர்வை ஒழிப்போம் என்ற கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் கரிகால பாண்டியன், நிலக்கோட்டை பேரூராட்சி தலைவர் சுபாஷினி பிரியா கதிரேசன், நிலக்கோட்டை பேரூராட்சி துணைத் தலைவர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோன்று மைக்கேல் பாளையத்தில் கோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தாகரிகால பாண்டியன் தலைமையில் பட்டாசு வெடித்தும், மேளதாளம் முழங்க வரவேற்பு அளித்தனர். நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.