உள்ளூர் செய்திகள்

(கோப்பு படம்)

தமிழகத்தில் இலக்கியவாதிகளை கொண்டாடுவதில்லை- திமுக எம்.பி. கனிமொழி பேச்சு

Published On 2022-11-26 21:45 GMT   |   Update On 2022-11-27 01:29 GMT
  • தமிழை மீட்டெடுக்க வேண்டிய கால கட்டத்தில் நாம் நின்று கொண்டிருக்கிறோம்.
  • தமிழின் பெருமையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் கடமை நமக்கு உள்ளது.

திருநெல்வேலியில் நடைபெற்ற பொருநை இலக்கிய திருவிழாவில் கலந்து கொண்டு பேசிய திமுக எம்.பி.கனிமொழி தெரிவித்துள்ளதாவது:- தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு இலக்கிய விழாக்கள் அதிகமாக நடத்தப்படுகிறது. தமிழை வளர்க்கவே இந்த விழாக்கள் நடத்தப்படுகிறது.

முன்பு மதுரை, சென்னையில் மட்டும் புத்தக திருவிழாக்கள் நடத்தப்படும். தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி மாவட்டந்தோறும் புத்தக திருவிழா நடத்துவதால், அனைத்து மக்களுக்கும் எளிதாக புத்தகங்கள் கிடைக்கிறது.

புத்தகம் வாசிப்பு என்பது மிக முக்கியம் ஆகும். கேரளா மாநிலத்தில் கோவில் விழாக்களை இலக்கியம் சார்ந்து நடத்துகிறார்கள். ஆனால் தமிழகத்தில் இலக்கியத்தையும், இலக்கியவாதிகளையும் கொண்டாடுவதில்லை. அதை மறந்து விட்டார்கள். மறந்து போனதை உருவாக்கி தருவது இந்த இலக்கிய திருவிழா.

முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதியின் புத்தகங்கள் நம்மை சரியான திசையில் அழைத்து செல்லும். படிக்க, படிக்க சிந்தனைகள் விரிவாகும். திராவிட எழுத்தாளர்களின் எழுத்துக்கள் சமூக சிந்தனையை மேம்படுத்தியது.

சமூக மக்களின் விடுதலைக்காக திராவிட எழுத்தாளர்கள் எழுதினார்கள்.இன்றைய சினிமாக்களில் பெண்ணடிமை இருக்கிறது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, மந்திரிகுமாரி திரைப்படத்தில் பெண் விடுதலை தொடர்பாக எழுதினார்.

தமிழை மீட்டெடுக்க வேண்டிய கால கட்டத்தில் நாம் நின்று கொண்டிருக்கிறோம். நமது மொழி, கலாச்சாரம் அழிந்து போய் விடக்கூடாது. தமிழகத்துக்குள் சாதி, மதத்தின் பெயரால் யாரும் நுழைந்து விட முடியாது. அதற்கு திராவிட எழுத்தாளர்கள் எழுதிய எழுத்துக்களே காரணம் ஆகும்.

இன்று தமிழை கொண்டாடுவதாக கூறுகிறவர்கள், தமிழுக்கு உரிய அங்கீகாரம் தரவில்லை. நீதிமன்ற மொழியில் தமிழை அனுமதிக்க மறுக்கிறார்கள். கீழடியை அவர்கள் ஏற்கவில்லை. நமது இலக்கியம், கருத்துகள், சுய மரியாதையை காக்க தமிழின் பெருமையை புரிந்து கொள்ள வேண்டும். அவற்றை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் கடமை நமக்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News