உள்ளூர் செய்திகள்

கலெக்டர் விஷ்ணு தீபாவளி கதர் சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்த காட்சி.

நெல்லையில் தீபாவளி கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனை - கலெக்டர் தொடங்கி வைத்தார்

Published On 2022-10-02 09:29 GMT   |   Update On 2022-10-02 09:30 GMT
  • தீபாவளி சிறப்பு கதர் விற்பனை தொடக்க விழா பாளையில் உள்ள கதர் அங்காடியில் இன்று நடைபெற்றது.
  • கலெக்டர் விஷ்ணு சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடங்கி வைத்து பேசினார்.

நெல்லை:

மகாத்மா காந்தியடிகளின் 154-வது ஜெயந்தி விழா மற்றும் தீபாவளி சிறப்பு கதர் விற்பனை தொடக்க விழா பாளையில் உள்ள கதர் அங்காடியில் இன்று நடைபெற்றது.

இதில் கலெக்டர் விஷ்ணு கலந்துகொண்டு காந்தி உருவப்படத்தை திறந்து வைத்து, தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடங்கி வைத்து பேசியதாவது:-

கதர் கிராமத் தொழில் வாரியம்

கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு ஆண்டு முழுவதும் வாழ்வளிக்க வேண்டுமென்ற சீரிய நோக்குடன் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் ஆரம்பிக்கப்பட்டது.

தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் கீழ் நெல்லை மாவட்டத்தில் பாளையில் கதர் அங்காடி, காலணி உற்பத்தி அலகு, பேட்டையில் தச்சுக்கொல்லு உற்பத்தி அலகு, வீரவநல்லூரில் 5 கைத்தறிகள் இயங்கி வருகிறது. இதனால் கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுத்த ப்பட்டும், அவர்க ளின் பொருளாதாரநிலை உயர்வு செய்யப்பட்டும், இத்துறையினரால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நெல்லை மாவட்டத்திற்கு வருடாந்திர கதர் விற்பனை குறியீடாக 2021-2022 -ம் ஆண்டிற்கு ரூ.41 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டதில் ரூ.44.87 லட்சம் விற்பனை எட்டப்பட்டுள்ளது. கிராம பொருட்கள் ரூ.17.56 லட்சம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் மண் பாண்ட தொழிலாளர்க ளுக்கு மழைக்கால பராமரிப்பு உதவித் தொகையாக 437 பயனாளிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.5,000 வீதம் வருடந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது.

தற்காலிக கதர் விற்பனை நிலையங்கள்

மாவட்ட கலெக்டர் அலுவலகம், அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், நக ராட்சிகள், பேரூராட்சிகள், அரசு மருத்துவமான வளாகங்களில் தற்காலிக கதர் விற்பனை நிலையங்கள் இன்று முதல் தீபாவளி முடியும் வரை திறக்கப்படுகிறது. இங்கு தரமிக்க அசல் வெள்ளி ஜரிகையினால் ஆன பட்டு சேலைகள், கதர் வேஷ்டிகள், துண்டு ரகங்கள், ரெடிமேட் சட்டைகள், மெத்தை, தலையணைகள், கண் கவரும் கதர் பட்டு ரகங்கள், கதர் பாலியல்டர் மற்றும் உல்லர் ஆகிய ரகங்களும், சுத்தமான தேன், குளியல் சோப்பு சாம்பிராணி, பூஜைப் பொருட்கள், பனைவெல்லம் மற்றும் பனை பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக மத்திய, மாநில அரசுகளின் உதவி பெற்று சிறப்பு தள்ளுடி அனுமதிக்கப்படுகிறது.

அரசு துறைகளில் பணியாற்றும் நபர்கள் மாத ஊதியத்தில் 10 சதவீதம் தவணைகளில் பெற்றிடும் வகையில் கடனுக்கும் கதர் ரகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொது மக்கள் மற்றும் அரசுத்துறை ஊழியர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் தீபாவளி வளர எல்லா நாட்களிலும் கதர் அங்காடிகள் செயல்படும்.

இந்த ஆண்டு நெல்லை மாவட்டத்திற்கு கதர் விற்பனை குறியீடாக ரூ.46.25 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்குறியீட்டினை அடைந்திட பொதுமக்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் இத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் நூற்பாளர்கள் மற்றும் நெச வாளர்களின் வாழ்வாதாரம் சிறக்க கதர் துணிகளை வாங்கி ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ, பாளை தாசில்தார் ஆனந்த பிரகாஷ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெய அருள்பதி, கண்காணிப்பாளர் மாரிமுத்து, மேலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News