உள்ளூர் செய்திகள்

தருமபுரி கலெக்டர் அலுவகத்தில் மனு அளிக்க வந்த கிராம மக்களை படத்தில் காணலாம்.

மாடுபிடிப்பதில் இரு தரப்பினரிடையே தகராறு கலெக்டரிடம் மனு

Published On 2023-08-01 15:08 IST   |   Update On 2023-08-01 15:08:00 IST
  • தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று கூறி ஏளனமாக பேசி வருகின்றனர்.
  • மாடுபிடிக்க சென்ற போது அடித்து உதைத்து துன்புறுத்தினர்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட நாகனம்பட்டி ஊராட்சியில் சங்கனம்பட்டி கிராமத்தில் உள்ள கண்ணன் கொட்டாய் பகுதியில் வசிக்கும் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

காரிமங்கலம் ஒன்றியம், சங்கனபட்டி கிராமத்தில் கண்ணன் கொட்டாய் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மக்கள் குடியிருந்து வசித்து வருகிறோம். மேலும் அதே பகுதியில் மாற்று சமூகத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் எங்களை தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று கூறி ஏளனமாக பேசி வருகின்றனர். எங்கள் ஊரில் உள்ள அம்மன் கோவில் திருவிழாவிற்கு எங்களிடமும் வரி வசூலித்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 29-ம் தேதி கோவில் திருவிழாவை முன்னிட்டு மாடுபிடிக்கும் விழா நடைபெற்றது.

அந்த விழாவில் நாங்கள் சென்று மாடுபிடிக்க சென்ற போது எங்களை தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று சிலர் அடித்து உதைத்து துன்புறுத்தினர். படுகாயம் அடைந்த எங்களில் ஒரு சிலர் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது தொடர்பாக காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை . எங்கள் மீது மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் சிலர் வீட்டுகளை காலி செய்து வெளியில் தங்கி உள்ளனர்.

எனவே மேற்படி நபர்கள் மீது சட்டரீதியான துரித நடவடிக்கை எடுக்கவும், எங்கள் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று புகார் மனுவாக கலெக்டரிடம் அளித்தனர்.

Tags:    

Similar News