உள்ளூர் செய்திகள்

ரூபி மனோகரன் எம்.எல்.ஏ,

'மாணவர்களுக்கு ஒழுக்கத்தை வீட்டில் இருந்தே கற்றுக்கொடுங்கள்' -பெற்றோருக்கு, ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வேண்டுகோள்

Published On 2022-12-01 10:10 GMT   |   Update On 2022-12-01 10:10 GMT
  • எதிர்கால வாழ்க்கை பாடத்தை கற்க பள்ளி கூடங்களுக்கு செல்லும் நம் பிள்ளைகளுக்கு ஒழுக்கம் என்னும் பாடத்தை வீட்டில் இருந்தே எடுக்க வேண்டியது அவசியமாகிறது
  • பெங்களூருவில் கண்டறியப்பட்டுள்ள தவறுகள், நம் தமிழ்நாட்டில் மட்டுமின்றி, நாட்டின் எந்தவொரு மூலையிலும் இனி நடைபெறக்கூடாது. பிள்ளைகளை வழி நடத்துகின்ற முதல் பொறுப்பு, அவர்களது பெற்றோருக்கு த்தான் இருக்கிறது.

நெல்லை:

தமிழக காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திடீர் சோதனை

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பெரும்பாலான தனியார் பள்ளிகளில் 8, 9 மற்றும் 10-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவ-மாணவிகளின் பைகளில் நேற்று ஒரேநேரத்தில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவந்துள்ளன.

அங்கு கருத்தடை சாதனம், கருத்தடை மாத்திரை, சிகரெட்டுகள், லைட்டர்கள், ஆணுறைகள், போதைக்காக பயன்படுத்தும் ஒயிட்னர்கள் அவர்களின் பைகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்கு ள்ளாக்கி இருக்கிறது.

ஒழுக்கம் எனும் பாடம்

சில மாணவர்கள், தண்ணீர் பாட்டிலில் மதுபானத்தை கலந்து கொண்டு வந்து குடிப்பதும், இந்த சோதனையில் அம்பலமாகி இருக்கிறது. இது பெங்களூருவில் நடந்த விஷயம்தானே என்று நாம் எளிதில் கடந்து போய்விட முடியாது. இந்த சமூகமும், அனைத்து பெற்றோர்களும் சிந்திக்க வேண்டிய தருணம் இது.

எதிர்கால வாழ்க்கை பாடத்தை கற்க பள்ளி கூடங்களுக்கு செல்லும் நம் பிள்ளைகளுக்கு ஒழுக்கம் என்னும் பாடத்தை வீட்டில் இருந்தே எடுக்க வேண்டியது அவசியமாகிறது.

கொரோனா காலக்கட்டத்துக்கு பிறகு, எல்லா மாணவர்களின் கைகளிலும் இன்டர்நெட் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் போன் இருக்கின்றது. இன்டர்நெட்டில் நல்லதும், கெட்டதும் நிறைந்திருக்கின்றது. நம் பிள்ளைகளுக்கு நல்ல விஷயங்களை மட்டுமே நாம் கற்றுக்கொடுக்க வேண்டும். நல்ல விஷயங்களை மட்டும் தேடிக் கற்க நாம் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.

ஊக்கம்

எது நல்லது, எது கெட்டது என்று பிரித்து பார்க்கிற பக்குவத்தை பிள்ளைகளிடத்தில் ஏற்படுத்தும் முதல் பொறுப்பு பெற்றோர்களையே சாரும். ஒவ்வொரு பெற்றோரும், பள்ளிக்கூடத்துக்கு செல்லும் தங்கள் பிள்ளைகளின் திடீர் செயல்பாடுகளை கண்காணிப்பதோடு, அவர்கள் நல்வழியில் செல்லும் அறிவுரைகளையும், ஊக்கத்தையும் தொடர்ச்சி யாக வழங்க வேண்டும்.

பெங்களூரு போன்று தமிழகத்தில் மாணவர்கள் இருக்க மாட்டார்கள், இருக்கக்கூடாது என்று நாம் நம்பும் அதேநேரத்தில், தமிழக அரசும் பள்ளிக்கூடங்களில் மாணவ ர்களின் செயல்பாடுகள் ஆரோக்கிய மாக இருக்கின்றதா என்பதைக் கண்காணிக்க வேண்டும். இல்லையென்றால், மிகப்பெரிய கலாச்சார சீரழிவை இது ஏற்படுத்தும்.

ஆரோக்கியமான சமூகம்

பெங்களூருவில் கண்டறியப்பட்டுள்ள தவறுகள், நம் தமிழ்நாட்டில் மட்டுமின்றி, நாட்டின் எந்தவொரு மூலையிலும் இனி நடைபெறக்கூடாது. பிள்ளைகளை வழி நடத்துகின்ற முதல் பொறுப்பு, அவர்களது பெற்றோருக்கு த்தான் இருக்கிறது.

பிள்ளைகளை கண்காணியுங்கள். அன்போடு கலந்து அறிவுரைகளை வழங்குங்கள். தவறு நடந்தால் உடனே கண்டியுங்கள். நல் ஒழுக்கத்தை கற்றுக்கொடுங்கள். நல்ல ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க மாணவர்களுக்கு வழிகாட்டுங்கள்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Tags:    

Similar News