உள்ளூர் செய்திகள்

திருவிழாவில் கழுமரம் ஏறிய இளைஞர்களை படத்தில் காணலாம்.


கோவில் திருவிழாவில் கழுமரம் ஏறிய இளைஞர்கள்

Published On 2022-06-10 04:36 GMT   |   Update On 2022-06-10 04:36 GMT
  • திண்டுக்கல் மாவட்டம் செந்துறை அருகே மணக்காட்டூரில் முத்தாலம்மன் கோவில் திருவிழாவில் இளைஞர்கள் கழுமரம் ஏறினார்கள்.
  • ஏற்பாடுகளை மணக்காட்டூர் ஊர்பொதுமக்கள், விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பூசாரிகள் செய்திருந்தனர்.


செந்துறை:

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா செந்துறை அருகே மணக்காட்டூரில் முத்தாலம்மன் கோவில் திருவிழா நடந்தது. இதையொட்டி கடந்த மாதம் 25-ம் தேதி சுவாமி சிலை செய்ய பிடிமண் எடுத்துக் கொடுக்கப்பட்டது. 8-ம் தேதியன்று இரவு கிராம தேவதைகளுக்கு கனி வைத்தல் நிகழ்ச்சியை தொடர்ந்து முத்தாலம்மனுக்கு காப்பு கட்டி விரதம் தொடங்கினர்.


இதனை தொடர்ந்து தோரணம் கட்டுதல் நடந்தது. பின்னர் தேவராட்டம், கரகாட்டம், குறவன் குறத்தி ஆட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பின்னர் முத்தாலம்மன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோவிலுக்குள் சென்றது. அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. பின்னர் மேளதாளம் முழங்க வாண வேடிக்கையுடன் மின்ரதத்தில் அம்மன் முக்கிய வீதிகளில் நகர்வலம் வந்தார்.

அம்மன் குடி புகுதல் நிகழ்ச்சியை தொடர்ந்து அம்மனுக்கு முளைப்பாரி, மாவிளக்கு, பால்குடம், அக்கினிசட்டி எடுத்து வந்து பக்தர்கள் தங்களது நேர்த்திகடன்களை செலுத்தினர். பின்னர் படுகளம் போடுதல், குட்டி கழுமரம் ஏறுதல், பந்தய கழுமரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கழுமரத்தில் போட்டி போட்டு கொண்டு ஏறினர். இதில் பழனிபட்டியை சேர்ந்த சின்னக்கருப்பன் கழுமரம் ஏறி இலக்கை தொட்டார்.


பின்னர் பொங்கல் வைத்து கிடா வெட்டுதல் நிகழ்ச்சியை தொடர்ந்து தீவட்டி பரிவாரங்கள், வாண வேடிக்கைகளோடு அம்மன் பூஞ்சோலை செல்லுதல் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த பக்தர்கள் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை மணக்காட்டூர் ஊர்பொதுமக்கள், விழாக்குழுவினர் மற்றும் பூசாரிகள் செய்திருந்தனர்.




Tags:    

Similar News