உள்ளூர் செய்திகள்

தேவர் தங்க கவசத்தை ராமநாதபுரம் டிஆர்ஓ வசம் ஒப்படைக்க வேண்டும்- ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

Published On 2022-10-26 12:00 GMT   |   Update On 2022-10-26 12:00 GMT
  • ஓ.பன்னீர்செல்வம் தங்கக்கவசத்தினை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
  • தற்போதைய அ.தி.மு.க. பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அவரது தரப்பில் வாதிடப்பட்டது.

மதுரை:

தேவர் தங்கக் கவசம் தொடர்பாக அ.தி.மு.க. பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

விடுதலைப் போராட்ட வீரர் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு 2014ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா 13 கிலோ தங்க கவசத்தை வழங்கினார். இந்த தங்கக் கவசம் மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள வங்கியில் அ.தி.மு.க. மற்றும் பசும்பொன் தேவர் நினைவாலயம் ஆகியோரின் பெயரில் லாக்கரில் வைக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 30ந் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பிறந்த நாளை முன்னிட்டு 3 நாட்களுக்கு முன்பாக தங்கக் கவசத்தினை வங்கியில் இருந்து எடுத்துச் சென்று பசும்பொன்னில் அமைந்துள்ள முத்துராம லிங்கத்தேவர் சிலைக்கு அணிவித்து பின் மீண்டும் வங்கி லாக்கரில் வைப்பது வழக்கம்.

இதற்காக அ.தி.மு.க. பொருளாளரும் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவாலய பொறுப்பாளர்களும் வங்கியில் கையெழுத்திட்டு தங்க கவசத்தினை பெற்றுச் செல்வார்கள்.

தற்போது, அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தங்கக்கவசத்தினை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவரை கட்சியில் இருந்து நீக்கிய உத்தரவு செல்லும் என சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளன.

எனவே, தற்போதைய அ.தி.மு.க. பொருளாளராக உள்ள எனக்கே தங்கக் கவசத்தினை வங்கியில் இருந்து பெறுவதற்கான அதிகாரம் உள்ளது.

ஆனால், வங்கி அதிகாரிகள் எங்களிடம் தங்க கவசத்தினை ஒப்படைக்க மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

எனவே வருகிற 30ந் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பிறந்த நாளை முன்னிட்டு தங்கக் கவசத்தினை நாங்கள் எடுத்துச் செல்ல சட்டபூர்வமாக இடைக்கால உத்தரவு வழங்கவும், வங்கி கணக்கை அ.தி.மு.க. சார்பாக உபயோகப்படுத்தும் அதிகாரத்தை வழங்கவும், வங்கி அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, திண்டுக்கல் சீனிவாசன் தரப்பில் ஆஜரான வக்கீல்கள், தற்போதைய அ.தி.மு.க. பொருளாளராக மனுதாரர் ஏக மனதாக நியமிக்கப்பட்டுள்ளார். எனவே அவரிடம் தான் தங்க கவசத்தை ஒப்படைக்க வேண்டும் என்று வாதாடினார்கள்.

பின்னர் ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல்கள், அ.தி.மு.க. ஒற்றைத் தலைமை குறித்து ஏற்கனவே தாக்கல் செய்த வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளன. எனவே சீனிவாசன் தரப்பினரிடம் தங்க கவசத்தை ஒப்படைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.

இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி, மாலையில் தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தார். அதன்படி மாலையில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, தேவர் தங்க கவசத்தை ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலரிடம் (டிஆர்ஓ) ஒப்படைக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். மேலும், தங்க கவசத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி.க்கு உத்தரவிட்டார். தேவர் கவசம் வைக்கப்பட்டுள்ள வங்கியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Tags:    

Similar News