உள்ளூர் செய்திகள்

தேவனாபுரம் கரிவரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2023-08-20 14:06 IST   |   Update On 2023-08-20 14:06:00 IST
  • விழாவின் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம் இன்று அதிகாலை 4-ம் கட்ட வேள்வி பூஜையுடன் தொடங்கியது.
  • பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கரிவரதராஜ பெருமாளின் அருளாசி பெற்றுச்சென்றனர்.

மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட தேவனாபுரம் கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவி லில் பல லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன.

கோவில் பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து கும்பாபிஷேக விழா கடந்த வெள்ளியன்று முதற்கட்ட வேள்வி பூஜையுடன் தொடஙகியது. இதில் திவ்ய பிரபந்தம்,வேத பாராயணம் தொடக்கம், திருவாதாரணம் சாற்று முறை நடைபெற்றன.

நேற்று 2 -ம் கட்ட வேள்வி பூஜைகளும், பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சனம், பெருமாள் யாகசாலைக்கு எழுந்தருளல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.தொடர்ந்து மாலை 4 மணியளவில் 3 -ம் கட்ட வேள்வி பூஜைகள் நடைபெற்றன.

இதில் விமான கலஸ ஸ்தாபனம், பாண்டுரங்கன், சக்கரத்தாழ்வார்,யோக நரசிம்மர் மற்றும் ஆஞ்சநேயருக்கு பிரதிஷ்டை மருந்து சாற்றுதல், ஹோமம் - வேதபாராயணம் - திவ்ய பிரபந்தம் பூஜைகளும் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம் இன்று அதிகாலை 4-ம் கட்ட வேள்வி பூஜையுடன் தொடங்கியது. இதில் ஹோமம் வேத பாராயணம் - திவ்ய பிரபந்தம், நாடி சந்தானம், திருவாதாரணம், பூர்ணாஹூதி உபசாரங்கள், யாத்ரா தானம் கும்ப உத்தாபனமும் நடைபெற்றது.

தொடர்ந்து யாக சாலையில் இருந்து ஸ்ரீ தாசபளஞ்சிக ஸ்ரீ ராமானுஜ பக்த ஜன சபையினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் புனித நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்த கலசங்கள் எடுத்து வரப்பட்டு 8.30 மணிக்கு மகா (சம்ப்ரோக்ஷணம்) கும்பாபிஷேகம் நடைபெற்றது. காரமடை ஸ்ரீ வேத வியாச சுதர்சன பட்டர் சுவாமிகள் தலைமையில் கலசங்களில் இருந்து புனித நீர் கலசங்களுக்கு ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்காரங்களும் நடைபெற்றன. நிகழ்ச்சியில் கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், காரமடை, மேட்டுப்பாளையம், தேக்கம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கரிவரதராஜ பெருமாளின் அருளாசி பெற்றுச்சென்றனர்.

பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டன. இன்று மாலை 4 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. 

Tags:    

Similar News