உள்ளூர் செய்திகள்

அமைப்புச்சாரா தொழிலாளர்களின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்

Published On 2022-07-12 09:29 GMT   |   Update On 2022-07-12 09:29 GMT
  • சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி அமைப்புசாரா தொழிலாளர்களின் விவரங்களை ஒருங்கிணைக்க அமைப்புச்சாரா தொழிலாளர்களின் தேசிய தரவுதளம் என்ற ஒரு தரவுதளத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
  • தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்.

சேலம்:

சேலம் தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) கிருஷ்ணவேணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி அமைப்புசாரா தொழிலாளர்களின் விவரங்களை ஒருங்கிணைக்க அமைப்புச்சாரா தொழிலாளர்களின் தேசிய தரவுதளம் என்ற ஒரு தரவுதளத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

இந்த தரவு தளத்தில் கட்டுமான தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், வீட்டு பணியாளர்கள், விவசாய தொழிலாளர்கள், குத்தகைதாரர்கள், தச்சுவேலை செய்வோர், கல் குவாரி தொழிலாளர்கள், முடி திருத்துவோர், தெரு வியாபாரிகள் உள்ளிட்ட 156 வகையான இ.எஸ்.ஐ., பி.எப். பிடித்தம் செய்யப்படாத அமைப்பு சாரா தொழிலாளர்கள் தங்களின் விவரங்களை பதிவு செய்யலாம்.

அனைத்து பொது சேவை மையங்களிலும் மற்றும் அனைத்து இ-சேவை மையங்களிலும் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. http://eshram.gov.in என்ற இணையதளத்தில் தொழிலாளர்கள் சுயமாகவும் பதிவு செய்து கொள்ளலாம். மாநில அரசின் பல்வேறு வகையான நலத்திட்டங்களின் கீழ் பதிவு செய்துள்ள அனைத்து தொழிலாளர்களும் இத்தரவுதளத்தின் கீழ் பதிவு செய்ய வழிவகை உண்டு.

பதிவு செய்து கொள்ளும் தொழிலாளர்களின் வயது 18 முதல் 59-க்குள் இருக்க வேண்டும். எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. பதிவேற்றம் செய்வதற்கு ஆதார் அட்டை, ஆதாரில் இணைக்கப்பட்ட செல்போன் எண் அல்லது கைரேகை மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

வங்கி கணக்கு புத்தகம் போன்ற தேவையான விவரங்களும், இத்தரவுகளை பதிவேற்றம் செய்த பிறகு பயனாளிகளுக்கு 12 இலக்கு எண் கொண்ட அடையாள அட்டை வழங்கப்படும். அமைப்புசாரா தொழிலாளர்கள், வேலை காரணங்களுக்காகவோ அல்லது வேறு எங்கும் புலம் பெயர்ந்தாலும் அரசிடம் இருந்து பெற வேண்டிய சலுகைகளை தொடர்ந்து பெற இந்த அடையாள அட்டை உதவியாக இருக்கும்.

இந்த தரவுதளத்தில் இணைத்து கொள்ளும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு விபத்து காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சத்துக்கான விபத்து காப்பீடு வழங்கப்படும். எனவே, சேலம் மாவட்டத்தை சேர்ந்த அமைப்புசாரா தொழிலாளர்கள் இந்த தரவு தளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News