உள்ளூர் செய்திகள்

மனைவியை சரமாரியாக வெட்டிய கணவன் கைதுக்கு பயந்து தற்கொலை

Published On 2025-01-23 12:02 IST   |   Update On 2025-01-23 12:08:00 IST
  • முனியம்மாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு ராமசாமி அவ்வப்போது அவரிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது தெரிகிறது.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தளி:

தேன்கனிக்கோட்டையில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவன், மனைவியை கத்தியால் சரமாரியாக வெட்டி உள்ளார். படுகாயம் அடைந்த மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் கைதுக்கு பயந்து கணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை கோட்டைவாசல் பகுதியில் வசித்து வருபவர் ராமசாமி (55). இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வந்தார்.

இவரது மனைவி முனியம்மாள் (40). இவர் தேன்கனிக்கோட்டை பஸ் நிலையத்தில் பெட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இதில் 3 பேருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.

முனியம்மாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு ராமசாமி அவ்வப்போது அவரிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது தெரிகிறது.

இந்த நிலையில் இன்று காலை மீண்டும் இருவருக்கும் இடையே கடும் தகராறு ஏற்பட்டுள்ளது. நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த ராமசாமி கத்தியால் முனியம்மாவை சரமாரியாக வெட்டி உள்ளார். இதில் அவருக்கு தலை, கை, கால், வயிறு உள்ளிட்ட பல இடங்களில் வெட்டு காயம் விழுந்துள்ளது.

படுகாயங்களுடன் அலறியபடி முனியம்மாள் வீட்டை விட்டு வெளியே தெருவுக்கு ஓடிவந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் முனியம்மாவை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அதே நேரத்தில் இந்த விவகாரம் வெளியே தெரிந்ததால் போலீசார் தன்னை கைது செய்து விடுவார்கள் என்ற அச்ச உணர்வில் ராமசாமி தனது வீட்டிற்குள் சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து அறிந்த தேன்கனிக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தூக்கு போட்டு உயிரிழந்த ராமசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலத்த காயங்களுடன் முனியம்மாள் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News