கோத்தகிரியில் அபாய மரங்களை வெட்டி அகற்ற கோரிக்கை
- கடந்த வாரம் நடந்து சென்ற பள்ளி சிறுமி மீது கற்பூர மரத்தின் சிறிய மரக்கிளை ஒடிந்து விழுந்தது.
- பெரிய மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கோத்தகிரி,
கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட கோவில்மேடு பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு பழமை வாய்ந்த கிறிஸ்தவ ஆலயம், பள்ளிக்கூடம் உள்ளது.
கோவில்மேடு பகுதியில் உள்ள ரோட்டில்100க்கும் மேற்பட்ட அதிக உயரத்துடன் கூடிய கற்பூர மரங்கள் உள்ளன. அதில் உள்ள காய்ந்த கிளைகள் அவ்வப்போது சாலையில் செல்லும் வாகனங்கள் மீது விழுகிறது.இந்த ரோட்டில் கடந்த வாரம் நடந்து சென்ற பள்ளி சிறுமி மீது கற்பூர மரத்தின் சிறிய மரக்கிளை ஒடிந்து விழுந்தது.
இதில் சிறுமிக்கு கை, கால் மற்றும் தலையில் காயம் ஏற்பட்டு, அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். கோத்தகிரியில் தற்போது காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது. எனவே ரோட்டில் நிற்கும் கற்பூர மரங்கள், அங்கு உள்ள வீடுகளின் மேல் விழும் அபாயம் உள்ளது. எனவே கோவில்மேடு பகுதியில் அசம்பாவிதம் ஏற்படும் முன்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெரிய மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.