குந்தா நீரேற்று மின்திட்டத்தின் முதல் பிரிவு பணி தாமதம்
- 4 பிரிவில் தலா, 125 மெகாவாட், 500 மெகாவாட் மின் உற்பத்திக்கான பணி நடந்து வருகிறது.
- 2013-ம் ஆண்டு பட்ஜெட்டில், 110 விதியின் கீழ், அ.தி.மு.க., அரசு குந்தா நீரேற்று மின்திட்ட பணியை அறிவித்தது
ஊட்டி,
மஞ்சூர் அருகே காட்டு குப்பை பகுதியில், '1,800 கோடி ரூபாயில், 4 பிரிவில் தலா, 125 மெகாவாட், 500 மெகாவாட் மின் உற்பத்திக்கான பணி நடந்து வருகிறது.
முதல்கட்டமாக, 2,200 மீட்டருக்கான சுரங்கப்பாதை அமைக்கும் பணி, 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது.
இப்பணிக்கான நவீன கட்டுமான பொருட்கள் பெரும்பாலும் வெளிநாடு, பிற மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது. கட்டுமான பணியில் தனியார் பொறியாளர்கள், ஊழியர்கள் மும்பை, குஜராத் உள்ளிட்ட இடங்களில் இருந்து வரவழைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.
நடப்பாண்டு பெய்த தொடர் மழையால், கட்டுமான பொருட்கள் எடுத்து வருவதிலும், ஊழியர்களை பணியில் ஈடுபடுவதிலும் காலதாமதம் ஏற்பட்டது.
முதல் பிரிவான, 125 மெகாவாட் திட்டபணியை, டிசம்பர் 2022 இறுதிக்குள் முடித்து மின் உற்பத்தியை தொடங்க மின்வாரியம் திட்டமிட்டது. ஆனால், அது சாத்தியப்படவில்லை.
மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், கொரோனா காலத்தில் ஏற்பட்ட தாமதம், கடந்த 2 ஆண்டுகளில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளால் குறிப்பிட்ட நாட்களில் கட்டுமான பணி முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், நடப்பாண்டு முடிக்க வேண்டிய முதல் பிரிவுக்கான பணி, அடுத்தாண்டு முடிக்க திட்ட மிட்டுள்ளோம்,'என்றனர்.
கடந்த, 2013-ம் ஆண்டு பட்ஜெட்டில், 110 விதியின் கீழ், அ.தி.மு.க., அரசு குந்தா நீரேற்று மின்திட்ட பணியை அறிவித்தது. இந்த திட்டத்துக்கு டெண்டர் விட்டு ஒப்பந்ததாரரிடம் பணிகள் ஒப்படைத்து, 2016-ம் ஆண்டு பணிகள் துவக்கப்பட்டன.
2022-ம் ஆண்டில் முதல் பிரிவுக்கான பணி கூட இன்னும் நிறைவடையாத நிலையில், 9 ஆண்டை கடந்து இப்பணி நடந்து வருகிறது.